×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதுபோன்று யுஜிசி விதிகளை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்: இந்தியா கூட்டணி முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதுபோன்று, யுஜிசி விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியா கூட்டணி முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கை கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவு தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கை குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன். பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளை தெளிவாக மீறும் செயல்.

இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். எனவே, தனது இந்த கோரிக்கையை டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதுபோன்று யுஜிசி விதிகளை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்: இந்தியா கூட்டணி முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union government ,UGC ,Tamil Nadu Assembly ,M.K. Stalin ,India Alliance ,Chief Ministers ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Ministers ,Delhi ,Himachal Pradesh ,Jammu ,Kashmir ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...