×

வடசென்னை மாவட்ட அ.தி.மு.க பகுதி செயலாளர் பதவிக்கு ரூ.25 லட்சம் பேரம்: நிர்வாகிகள் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரல்

சென்னை: ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. மேலும், டிடிவி தினகரன் தனி கட்சியும் தொடங்கினார். அவ்வப்போது அதிமுகவில் உள்ள பொறுப்புகளை நிரப்புவதற்கு மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பணம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பணம் கொடுத்தும் பதவி கிடைக்காத பலர் மேலிடத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்து அலைந்து திரியும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வடசென்னையில் பகுதி செயலாளர் பொறுப்பிற்கு ரூ.25 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக தற்போது ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வியாசர்பாடி பகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இளங்கோ என்ற அதிமுக பகுதி செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை அந்த பொறுப்பிற்கு புதிய ஆள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த அவை தலைவர் ஒருவரும், இலக்கிய அணியை சேர்ந்த மற்றொருவரும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘‘புதிய பகுதி செயலாளரை நியமிக்க முடியவில்லை. அதற்கு ரேட் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,’’ என ஒருவர் கூறுகிறார். அதற்கு மற்றொருவர், இப்போது நியமிக்க மாட்டார்கள். மார்கழி மாதம் கழித்து, அடுத்த மாதம்தான் போடுவார்கள்,’’ எனக் கூறுகிறார். அதற்கு மற்றொருவர், ‘‘ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பேரம் பேசி வைத்துள்ளார்கள். அதில் திருஞானத்திற்கு ரூ.5 லட்சமும், அவருக்கு ரூ.20 லட்சமும் என கேட்டுள்ளார்கள்,’’ எனக் கூறுகிறார்.

அதற்கு மற்றொருவர், ‘‘கட்சியை கூறு போட்டு விற்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக விற்று வருகிறார்கள். அதுதான் தற்போது வியாபாரம். பெண்கள் கூட கட்சியை பார்த்து பணம் வாங்கிக் கொண்டுதான் போஸ்டிங் போடுகிறார்கள் என கேவலமாக கூறுகிறார்கள். எந்த அளவிற்கு கட்சி கேவலமாக சென்று கொண்டுள்ளது. கட்சியின் லட்சணம் இந்த மாதிரி உள்ளது. பேஸ்புக்கில் அனைத்தையும் போட்டு விடலாமா என யோசிக்கிறேன்.

கட்சியை அசிங்கப்படுத்துகிறார்கள். பேஸ்புக்கில் போட்டாதான் அவனுக்கு சூடு சொரணை வரும்’’ என்கிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு, ஒரு பகுதி செயலாளர் நியமனத்திற்கு ரூ.25 லட்சம் வரை பேரம் பேசுகிறார்கள். அம்மா இருந்தபோது கட்சி எப்படி இருந்தது. தற்போது எப்படி இருக்கிறது என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் இந்த ஆடியோவை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.

* கட்சியை கூறு போட்டு விற்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக விற்று வருகிறார்கள். அதுதான் தற்போது வியாபாரம்

The post வடசென்னை மாவட்ட அ.தி.மு.க பகுதி செயலாளர் பதவிக்கு ரூ.25 லட்சம் பேரம்: நிர்வாகிகள் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : North Chennai District ,AIADMK ,Chennai ,Jayalalithaa ,OPS ,EPS ,Sasikala ,TTV Dinakaran ,AIADMK… ,North Chennai District AIADMK ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...