சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ரயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாகனங்கள் அதிக அளவில் வருவதால் முக்கிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி முதல் 19ம் தேதி (நேற்று) வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காகவும் சென்னையில் வசிப்போர் கடந்த 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரயில், பஸ், கார்கள், விமானம் என்று சென்னையில் இருந்து மட்டும் சுமார் 16 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளன. அதே போல அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்பட உள்ளன.
இதனால், விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. விடுமுறை முடிந்து எப்படியாவது சென்னைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரும்பாலானவர்கள் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க தொடங்கியுள்ளனர். மேலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இன்று காலையும் அதிகமானோர் சென்னை திரும்புகின்றனர். இதனால், ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை ஜிஎஸ்டி, ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளிடில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் என அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகளின் இயக்கங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்கள்: ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதியது, முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.