×

போலீஸ் ஏட்டுவை மிரட்டிய போதை துணை நடிகர்கள் கைது

முத்துப்பேட்டை: போலீஸ் ஏட்டுவை மிரட்டிய போதை துணை நடிகர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாரதிராஜா (35), பாரதமணி (35). இரட்டை சகோதரர்கள். இருவரும் நடிகர் ஜெயம் ரவி நடித்து தீபாவளி அன்று வெளியான “பிரதர்” படத்தில் துணை வில்லன்களாகவும், அதேபோல் மழைக்கு பிடிக்காத மனிதன், சூர்யா நடித்த சிங்கம் போன்ற பல படங்களில் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை நடுவே குடிபோதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் வெடி வெடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியை மேற்கொண்ட எடையூர் போலீஸ் ஏட்டு தனபால், இருவரையும் கண்டித்துள்ளார். உடனே அவரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “எங்களுக்கு டிஜிபி, ஐஜி, டிஐஜி அனைவரையும் தெரியும். எடையூர் போலீஸ் ஸ்டேஷனை தீயிட்டு கொளுத்தி விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.

இதை வீடியோவாக பதிவு செய்த தனபால், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த எடையூர் போலீசார் துணை நடிகர்கள் பாரதிராஜா, பாரதமணி ஆகிய இரட்டையர்களை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபற்றிய வீடியோ வைரலாகி முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போலீஸ் ஏட்டுவை மிரட்டிய போதை துணை நடிகர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Bharathiraja ,Bharathamani ,Overur ,Muthupettai ,Tiruvarur district ,Jayam Ravi ,Diwali ,
× RELATED ரஜினி பட தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்