சென்னை: பாஜவில் உள்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மாவட்டத் தலைவர்கள் நியமனம், மாநில தலைவர் நியமனம் செய்வதில் கடும் குழப்பம் நிலவுவதால், தேசிய தலைமை கடும் குழப்பம் அடைந்துள்ளது. பாஜவில் தேசிய அளவில் உள்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் நியாயமாக தேர்தல்கள் நடைபெறுகின்றன. பல இடங்களில் பெயருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சியின் நிர்வாகிகளுக்கு வேண்டியவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிளை கழகம், ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத் தலைவர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜவில் 66 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத் தலைவர்களை நியமனம் செய்ய தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில், தேர்தல் நடத்திய நிர்வாகிகள் ஒரு மாவட்டத்துக்கு 3 பேரை தேர்வு செய்து அவர்களிடம் இருந்து வேட்பு மணி மற்றும், வாபஸ் பெறும் மனுக்களை வாங்கி வைத்துள்ளனர். தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேரில் ஒருவரை தேசிய தலைமை அறிவிக்கும். மற்ற 2 பேரிடம் ஏற்கனவே வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை தேர்தல் நடத்தும் நிர்வாகிகள் வாங்கி வைத்துள்ளனர்.
அதை வைத்து வாபஸ் பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு மாவட்டத்துக்கு 3 பேரிடம் எழுதி வாங்குவதால், முறையாக தேர்தல் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் எழுந்துள்ளது. அதில் பலர் தங்களது கோபத்தை மாநிலத் தலைமையிடம் தெரிவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத் தலைவர் தயா சங்கர் தனது பதவியை மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதே நிலைமைதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை அறிவிப்பது முறையல்ல என்று மாநில தலைவர் அண்ணாமலையிடம் பலர் புகார் தெரிவித்தனர். ஆனால் அவரோ நிர்வாகிகளிடம் எந்த குறைகளையும் கேட்காமல் உள்ளார். ஒரு பிடித்தம் இல்லாமல் உள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்போது தனக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டும் என்று அண்ணாமலை இதுவரை ஒரு பரிந்துரை கூட செய்யாமல் உள்ளார். அவருடைய ஆதரவாளர்கள் பலரும் மாவட்டச் செயலாளர்கள் பதவி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
ஆனால் அவரோ யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் உள்ளார். இதனால் தேசிய தலைமையே தற்போது 33 மாவட்டச் செயலாளர்களை ஒரிரு நாளில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் மீதம் உள்ள 33 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கட்சியின் விதிகளின்படி 33 மாவட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருந்தால் மாநில தலைவர் தேர்தலை நடத்தலாம். இதனால் இந்த மாதம் 20 அல்லது 21ம் தேதி மாநில தலைவருக்கான தேர்தலை நடத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. தேர்தல் அதிகாரியாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தலைவர் தேர்தல் பெயருக்கு நடத்தப்பட்டாலும், தேசிய தலைமை யாரை மாநில தலைவராக நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதோ அவர்களைத்தான் நியமிக்க முடியும். தற்போது மாநிலத் தலைவர்களுக்கான ரேசில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் ஆகியோரில் ஒருவரை நியமிப்பது குறித்து தேசிய தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அண்ணாமலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. பாஜக பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோசும் நினைக்கிறார்.
அவர் இருந்தால்தான் கட்சி வளரும் என்று நினைக்கிறார். ஆனால் அமித்ஷா உள்ளிட்டவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், நையினார் நாகேந்திரன் அல்லது தென்காசி ஆனந்தனை நியமிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால்தான் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனை நடத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தேசிய தலைமை உள்ளது. இதனால் தன்னை நியமனம் செய்த பிறகு மாவட்டத் தலைவர் பதவிக்கு தனக்கு வேண்டியவர்களை கொண்டு வரலாம் என்று அண்ணாமலை நினைப்பதால் அந்த நியமனங்களில் அவர் தலையிடாமல் உள்ளார்.
மேலும், லண்டனில் இருந்து திரும்பி வந்த அண்ணாமலை, 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் அவர் நேரம் கொடுக்கவில்லை. இதனால் திரும்பி விட்டார். ஆனால் தான் நினைக்கும்போது ஆர்எஸ்எஸ் தலைவர்களை அண்ணாமலை சந்திக்கிறார். இதனால் மாநில தலைவர் நியமனத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெற்றி பெறப்போகிறார்களா, பாஜ தலைவர்கள் வெற்றி பெறப்போகிறார்களா என்ற பரபரப்பு கட்சிக்குள் எழுந்துள்ளது. மாநில தலைவர் நியமனத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெற்றி பெறப்போகிறார்களா, பாஜ தலைவர்கள் வெற்றி பெறப்போகிறார்களா என்ற பரபரப்பு கட்சிக்குள் எழுந்துள்ளது.
* தமிழிசையின் கார் டிரைவர் வெற்றி பெற்றது எப்படி?
மண்டல நியமனங்களில் பல குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விருகம்பாக்கத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சந்திரராஜன் வீடு உள்ள மண்டலத்தில், காங்கிரசில் இருந்து பாஜவுக்கு வந்த பாண்டியராஜன் போட்டியிட்டார். அதில் 28 ஓட்டில் 25 ஓட்டுக்களை அவர் பெற்றார். ஆனால் தேர்தலில் போட்டியிடாதவரான தமிழிசையின் கார் டிரைவர் பிரதாப் சந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோல பல பகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கட்சித் தலைமையில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாநில, மாவட்ட தலைவர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகும்போது கட்சிக்குள் பூகம் வெடிக்கும் என்கின்றனர் நிர்வாகிகள்.
The post தமிழக பாஜ தலைவர் பதவி அண்ணாமலைக்கு மீண்டும் கிடைக்குமா? மாவட்ட தலைவர்கள் நியமனமும் தாமதமாகிறது; குழப்பத்தில் தேசிய தலைமை appeared first on Dinakaran.