திருவண்ணாமலை ஜன.18: திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் தரிசனம் செய்த திரைப்பட நடிகர் ஜெயம் ரவி ஜினி படத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை மாதம் பிறந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு திரைப்பட நடிகர் ஜெயம் ரவி நேற்று காலை சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிரசாதத்தை வழங்கினர்.
நடிகரை பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் அனைவருடனும் செல்பி புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்று போஸ் கொடுத்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் ‘காதலிக்க நேரமில்லை படம் வெளி வந்ததற்கும் நான் கோயிலுக்கு வந்ததற்கும் சம்பந்தமில்லை. தாய், தந்தையர் செய்த புண்ணியத்தாலும் மன நிம்மதிக்காகவும் கோயிலுக்கு வந்தேன். அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினால் திருவண்ணாமலைக்கு வந்து விடுவேன். எனது அடுத்த படமான ஜினி படம் 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது’ என்றார்.
The post ஜினி படம் 95 சதவீதம் நிறைவு நடிகர் ஜெயம் ரவி பேட்டி அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் appeared first on Dinakaran.