×

நடைபாதையில் வாடும் எய்ம்ஸ் நோயாளிகள்; உணர்ச்சியின்றி இருக்கும் ஒன்றிய, டெல்லி அரசுகள்.! ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே புறநோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியை காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேற்றிரவு பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் படுத்திருந்த எய்ம்ஸ் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுடன் உரையாடினார்.

அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், ‘நோயின் பாதிப்பு, கடுமையான குளிரில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒன்றிய, டெல்லி அரசுகள் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளன. எய்ம்ஸுக்கு வெளியே நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன்; அவர்கள் சிகிச்சைக்காக தொலைதூரத்திலிருந்து வந்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் அவர்கள் படுத்து தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒன்றிய அரசும், டெல்லி அரசும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் டெல்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காக கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்டார். குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், ஒன்றிய அரசையும், ஆம்ஆத்மி அரசையும் விமர்சித்தார்.

The post நடைபாதையில் வாடும் எய்ம்ஸ் நோயாளிகள்; உணர்ச்சியின்றி இருக்கும் ஒன்றிய, டெல்லி அரசுகள்.! ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Union ,Delhi governments ,Rahul Gandhi ,New Delhi ,Senior ,Congress ,Lok Sabha ,Delhi ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...