×

மரக்கட்டையால் அடித்து மகனை கொன்ற முதியவர் கைது

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் குடி போதையில் செல்போனில் அதிக சத்தமாக பாட்டு கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகனை கட்டையால் அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நாமக்கல்மேடு பகுதியில் குருவிகாணம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(79). இவரது மகன் கங்காதரன்(54). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடி போதையில் வீட்டிற்கு வந்த கங்காதரன், தனது படுக்கை அறைக்கு சென்று செல்போனில் அதிக சத்தத்துடன் திரைப்பட பாடலை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன், சத்தத்ைத குறைக்கும்படி கூறியுள்ளார். இதனை மகன் ே கேட்க மறுத்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ரவீந்திரன், தன் மனைவியுடன் படுக்கை அறைக்கு சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். ஆனால் அதன்பிறகு கங்காதரன் பாட்டு சத்தத்தை மேலும் அதிகமாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரவீந்திரன், மரக்கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கங்காதரன் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த ரவீந்திரனும், அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தனது மகன் மது போதையில் தவறி கீழே விழுந்ததில்தலையில் அடிபட்டு மயங்கியதாக, அப்பகுதியில் வசிப்போரிடம் அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் உதவியுடன் கங்காதரன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட ஆழமான காயமே மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடுமஞ்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்தவை அனைத்தும் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ரவீந்திரனை கைது செய்தனர்.

 

The post மரக்கட்டையால் அடித்து மகனை கொன்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Munnar ,Idukki ,Ravindran ,Kuruvikanam ,Namakkalmedu ,Idukki district, Kerala.… ,
× RELATED மைனா பட நடிகர் மரணம்