×

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியினை காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணை: தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும்  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர். ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் காளைகள் மற்றும் மாடுபிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் வரும் 2022ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும்பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான (ஆர்டிபிசிஆர்) சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.  எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்குபெறும். வீரர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வரும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.  வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணையவழியாக காண அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்; தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Cow BT ,Tamil Nadu Govt ,Chennai ,Jallikuttu match ,Jallikadu ,Tamil Nadu Government ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...