×

தண்ணீர் திருடிய விவசாயிகளுக்கு வங்கிக்கடன், மானிய விலையில் உரம் வழங்க கூடாது: கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பரம்பிக்குளம்-ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து கமலம், சுபா நடராஜன் ஆகியோருக்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, திட்டத்தின் முன்னாள் தலைவர் கே.பரமசிவம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், மதிப்புமிக்க தண்ணீரை முறையாக பாதுகாக்க வேண்டும்.பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் 30 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழக பொதுப் பணித்துறை செயல் பொறியாளர், நீர் வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் தண்ணீர் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறு ஆய்வு செய்ய வேண்டும்.தண்ணீர் திருட்டு தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். அதை பொதுப்பணி மற்றும் நீர்வள ஆதாரத்துறை மின் வாரியத்திற்கு அனுப்பி மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக்கூடாது. மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்களை துல்லியமாக கண்டுபிடிக்க டிரோன் கேமரா பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இந்த உத்தரவுகளை அமல்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

The post தண்ணீர் திருடிய விவசாயிகளுக்கு வங்கிக்கடன், மானிய விலையில் உரம் வழங்க கூடாது: கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kamalam ,Subha Natarajan ,Parampikkulam-Azhiyar ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!