×

செஸ்சில் 2 மடங்கு வருவாய் கார்ல்சனை மிஞ்சிய குகேஷ்

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் உலக சாம்பியன் ஆனார். முன்னதாக, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெறுவதற்கான கேண்டிடேட்ஸ் போட்டிகளிலும் குகேஷ் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்தார். கடந்த 2024ம் ஆண்டில் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் வென்றதன் மூலம் ரூ.13.6 கோடி ரூபாய் வருவாயை குகேஷ் ஈட்டியுள்ளார். செஸ் மூலம் அதிக வருவாய் ஈட்டியோர் பட்டியலில் அவரே முதலிடம் வகிக்கிறார். சீன கிராண்ட் மாஸ்டரும் முன்னாள் உலக சாம்பியனுமான டிங் லிரென், ரூ.10.2 கோடியுடன் 2ம் இடத்தில் உள்ளார். உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரூ. 5.45 கோடி வருவாயுடன் 4ம் இடத்தில் இருக்கிறார்.

கடந்த 2024ல் 17 செஸ் வீரர்கள், ரூ.86 லட்சத்துக்கு அதிகமான ரொக்கப் பரிசு பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இரு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பியும் ஒருவர். அதிக வருவாய் பெற்றுள்ள செஸ் வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா, ரூ.1.7 கோடியுடன் 9ம் இடத்தில் உள்ளார். இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி ரூ.1 கோடியுடன் 15ம் இடத்தில் உள்ளார். உலக செஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனை விட, 2 மடங்குக்கும் அதிகமான தொகையை போட்டிகளில் வென்றதன் மூலம் குகேஷ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post செஸ்சில் 2 மடங்கு வருவாய் கார்ல்சனை மிஞ்சிய குகேஷ் appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Carlsen ,New Delhi ,Grandmaster ,Tamil Nadu ,Ding Liren ,World Chess Championship ,Candidates Tournament ,World Championship… ,Dinakaran ,
× RELATED நார்வே செஸ் டோர்னமென்டில் ஜாம்பவான்...