புதுடெல்லி: ‘இளைஞர்களின் திறன்கள் வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும்’ என்று பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதிலும் இருந்து அரசியல் பின்புலம் இல்லாத 1 லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வரும் பிரதமர் மோடியின் முயற்சிகளில் ஒன்றாக வளர்ச்சி அடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் கண்காட்சி டெல்லியில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி நாள் முழுவதும் கண்காட்சியில் பங்கேற்று இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டு ரசித்தார். பின்னர் அவர் இளைஞர்கள் மத்தியில் பேசியதாவது: இந்தியாவை வளர்ச்சி அடைய செய்வதற்கான இலக்கை சிலர் கடினமாக நினைக்கலாம். ஆனால் அது கடினமானது அல்ல. விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த பாரதம்) என்ற கொள்கையை பின்பற்றி ஒவ்வொரு அடியையும் கொள்கையையும் முடிவையும் எடுத்து சென்றால் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாட்டில் இளைஞர்களின் பலம் மற்றும் எண்ணிக்கை அதிகம். ஒரு நாடு முன்னேற்றம் அடைய பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.
இதைத்தான் இன்றைய இந்தியா செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் எண்ணற்ற இலக்குகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்பட்டுள்ளன. 2030க்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கு அதற்கு முன்னதாகவே எட்டப்படும். அரசாங்கத்தால் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது. விக்சித் பாரத் திட்டத்துக்கான உரிமை மோடிக்கு மட்டும் சொந்தமில்லை. நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கானது. லட்சிய இலக்குகளை அடைவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் சுறுசுறுப்பான பங்கேற்பும் கூட்டு முயற்சியும் அவசியம். 2047 வரையிலான 25 ஆண்டுகள் இந்தியாவின் பொற்காலம்.விக்சித் பாரத் என்ற கனவை இளைஞர்கள் நனவாக்குவார்கள் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் இளம் தலைமுறையினர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அனைத்து பிரச்னைகளுக்கும் இளைஞர்கள் தீர்வு காண்பார்கள் என்று விவேகானந்தர் கூறினார். அவருடைய வார்த்தையில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post இளைஞர்களின் திறன்கள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.