×

சீரோடும் சிறப்போடும் தமிழ்நாட்டு மக்களால் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் விழா: தமிழ்நாடு அரசு அறிக்கை

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“பொங்கலோ பொங்கல்” என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாகத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிந்து புதியன புகும் நாளாக மார்கழி கடைசி நாளன்று போகி. தமிழர் திருநாளாம் பொங்கல் தை முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வானம் கொடுத்தது; பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான்நோக்கிக் கரம் குவித்து உதயசூரியனை வணங்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற அய்யன் வள்ளுவர் குறளிற்கேற்ப, வேளாண் பெருங்குடி மக்களுக்கு நன்றி மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நிறைவு நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்தித்துத் தங்கள் அன்பையும், உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து மகிழ்வர்.

தமிழர்களின் பெருமித அடையாளம் ஜல்லிக்கட்டு:
தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) எனப் பல்வேறு பெயர்களில் இது குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.1.2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட நவீன அரங்காக அமைந்துள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கோலம்:
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் மூலமாக பொங்கல் சுற்றுலா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் சுற்றுலா விழாவானது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயற்கையான சூழலுடன் அமைந்த ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு வரவேற்பு அளித்து, அவர்களுடன் ஒன்றுகூடி புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டுப் போட்டிகள்:
கிராமிய நடனம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்வார்கள். பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், அச்சாங்கல், கோ கோ விளையாட்டு, பம்பரம் விடுதல், கோலி விளையாட்டு போன்ற விளையாட்டுகளும், இசை நாற்காலிப் போட்டி, உறி அடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இன்றைய மாறிவரும் நவீன வாழ்க்கைச் சூழலில் மறந்து வரும் நமது பாரம்பரிய நெறிமுறைகளை வளர்ந்து வரும் நம் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையினரும் அறிந்திடும் வகையில் பொங்கல் சுற்றுலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ :
பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் 13.1.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், சென்னையில் 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு, ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கலைப் பொதுமக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிடும் வகையில், கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சீரோடும் சிறப்போடும் தமிழ்நாட்டு மக்களால் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் விழா: தமிழ்நாடு அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Pongalo Pongal ,Tamil Thirunalam Pongal Thirunaya ,Tamil Nadu Government ,
× RELATED சென்னையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை