×

விவிஐபி மாவட்டத்தில் முதன்மை நிர்வாகிகளை ஓரங்கட்டி முக்கிய பதவியை பிடிக்க காய் நகர்த்தும் கதையை சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை கட்சியின் இரட்டையர்களில் ஒருவரின் வீட்டுல பலர் தவம் இருக்காங்களாமே, என்ன காரணம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ மாங்கனி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியை பிடிக்க, இலைக்கட்சி நிர்வாகிகள் இப்போதே துண்டுபோட ஆரம்பிச்சிட்டாங்க. மாஜி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் என பெரிய பட்டாளமே அப்பதவியை பிடிக்க காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்க. ஆனால், அப்படி மேயர் பதவியை பிடிக்க நினைக்கும் இலை கட்சியின் முக்கியஸ்தர்களின் வார்டுகள், பெண்கள் வார்டுகளாக இருக்காம். இதனால், வேறு வார்டில் நிற்க முயற்சி செய்து வர்றாங்க. இதற்காக பொது வார்டில் உள்ள இலை கட்சியின் செயலாளர்களை அணுகி கரன்சி, கட்சியில் பதவி என்று ஆசைவார்த்தை கூறி உங்கள் வார்டில் நாங்கள் நிற்கிறோம். நீங்கள் விட்டு கொடுத்து எங்களுக்காக தேர்தல் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டு வர்றாங்க. இந்த ஜிக்ஜாக் ஆசாமிகளை கண்டதும் பல வார்டு நிர்வாகிகள் தலைமறைவாகி ஓடுகிறார்களாம். சிலர், வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று கூறச் சொல்கிறார்களாம். எந்த பக்கம் வீசினாலும் போட்டியிட வாய்ப்பு இல்லையே என்று முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாம். இதனால ரெண்டாம் கட்ட நிர்வாகிகள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்காங்க. எனவே, அவர்கள் இப்போதே உள்ளாட்சி தேர்தலில் தீவிரம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். தினந்தோறும் வார்டு பக்கம் போறாங்களாம். குறிப்பா கொண்டலாம்பட்டி பக்கமுள்ள நிர்வாகிகள், மாஜி விவிஐபி வீட்டு முன்னாடியே தவம் கிடக்கிறாங்க. கடந்த தேர்தலில் தெற்கு தொகுதியில சீட் கிடைக்குமுன்னு கடைசி வரை மாஜி மண்டலம் எதிர்பார்த்தார். ஆனால் நழுவிபோய் விட்டது. ஆனா, இந்த முறை மேயர் பதவியை பிடித்தே தீருவது என்று சபதம் வேற செஞ்சி இருப்பதாக, அவருடைய அடிபொடிகள் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சி மக்கள் பிரதிநிதியால நிர்வாகமே ஸ்தம்பித்து இருக்காமே. உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்தில் கணியான ஒன்றியத்துல தும்பையான காடுனு முடியற ஊராட்சிக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த மலைவாழ் பழங்குடியினத்தை சேர்ந்தவரு தலைவரா இருக்காராம். இந்த ஊராட்சியிலே முன்னாடி தலைவரா இருந்தவரு ஜெயமானவராம். அவருதான் இப்ப துணை தலைவராம். அவரு தலைவரா இருந்தப்பவே பல ‘தில்’லான காரியங்களை செய்து கரன்சிகளை குவித்தாராம். அதுவும் அரசு புறம்போக்கு இடத்திலேயே பசுமை வீடுகளை கட்டி கொடுத்து கரன்சியை அள்ளினாராம். அதோட, அவருக்கும் ஆந்திர காட்டுக்கும் ரொம்ப தொடர்பாம். அவருதான் இப்ப, ஊராட்சியில எந்த காரியத்தையும் செய்ய விடுறதில்லையாம்.வார்டு உறுப்பினருங்களை ஒன்னா சேத்து, தலைவரை செயல்படவிடாம முடக்குகிறாராம். அதோட ஊராட்சி அலுவலகத்தையும் பூட்டு போட்டு பூட்டிட்டாராம். அவரது ஆட்டத்தை ஒடுக்கி மக்கள் பணி செய்ய ஊராட்சி தலைவரை செயல்பட விடணும்னு மக்கள் கோரிக்கை வைத்து இருக்காங்களாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தலுக்காக ஆள் தேடும் நிலை எந்த மாவட்டத்தில், எந்த கட்சியில் ஏற்பட்டு இருக்கு…’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகள் உள்ளன. இதில், கடைமடை நகராட்சியில் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டார்களாம். முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் கடைமடை நகராட்சியில் உள்ள இலை கட்சி தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம். விரைவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் கடைமடை நகராட்சியில் யாரை நிறுத்தலாம் என்று பேச்சு மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் இருந்து வருகிறதாம்.உள்ளடி வேலைகளால் தான், முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு சென்று விட்டனர். இதனால் கடைமடை நகராட்சிக்கு ஆள் கிடைக்காமல் இலை கட்சி தடுமாற்றத்தில் உள்ளதாம். பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும், தேர்தலில் போட்டியிட ஆள் தேட வேண்டிய நிலை இலை கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக மன்னர் மாவட்டம் முழுவதும் தொண்டர்களுக்குள் வேதனையோடு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘டிரான்ஸ்பருக்கு அளித்த மனுவுக்கு உடனே ரெஸ்பான்ஸ் அளித்துள்ளார்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘காக்கிகளின் துறையில்  பணிபுரியும் நபர்களின் குறைகளை கேட்க, மாவட்டம் வாரியாக குறைகேட்பு முகாம்  நடத்தினாங்க. இதில், பெரும்பாலான மனுக்கள், இடமாறுதலாக தான் இருந்ததாம். கோவையில் சமீபத்தில் நடந்த காவல்துறை குறைகேட்பு முகாமிலும் இதுபோன்ற  மனுக்களே அதிகளவில் வந்தன. இந்த மனுக்கள் மாநகர், புறநகர் என இரண்டாக தரம்  பிரிக்கப்பட்டு, மாநகர போலீஸ் கமிஷனருக்கும், புறநகர் மாவட்ட எஸ்பிக்கும்  தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டது. இவற்றில், மாநகர போலீஸ் கமிஷனர்  பெரும்பாலான மனுக்களை பரிசீலனை செய்து, மேல்நடவடிக்கை எடுத்து காக்கிகளிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டாராம். டிரான்ஸ்பர் வாங்கியவர்கள் ரொம்ப சந்தோஷமாக தங்கள் வீடுகளுக்கு ெசன்றார்களாம்…’’  என்றார் விக்கியானந்தா….

The post விவிஐபி மாவட்டத்தில் முதன்மை நிர்வாகிகளை ஓரங்கட்டி முக்கிய பதவியை பிடிக்க காய் நகர்த்தும் கதையை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Kai ,VVIP ,Leaf Party ,Uncle ,Peter ,Mangani Corporation ,
× RELATED கொடுத்த பணத்தை திருப்பி தராதவரின் பைக்கினை எரித்த மூவருக்கு வலை