×

அதிசயங்கள் நிறைந்த பொள்ளாச்சி ராமர்

இயற்கை எழில் கொஞ்சும் ஊர் பொள்ளாச்சி! இந்த சுற்று வட்டார பகுதிகள் முழுவதிலும் தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன. ஆகையால், `பொள்ளாச்சி தேங்காய்’ மிகவும் பிரபலம். அதே போல், ஆன்மிகத்திற்கும் துளியும் சலிக்காத ஊர் பொள்ளாச்சி என்றும் சொல்லலாம். புளியம்பட்டி தெப்பக்குளம் தெருவில் இருக்கும் “அருள்மிகு மாரியம்மன் கோயில்’’, மரப்பேட்டை பகுதியில் இருக்கும் “அழகு நாச்சியம்மன் கோயில்’’, பொள்ளாச்சி காவல் நிலையம் சாலையில் அமைந்திருக்கும் “ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயில்’’, பி.கே.கோயில் தெருவில் அமைந்திருக்கும் “ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில்’’ இப்படி பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களின் பட்டியலை செல்லிக் கொண்டே போகலாம்.

முதலில் பிரதிஷ்டையானவர் அனுமார்

இந்த பட்டியலில் மிக முக்கியமான கோயில், “பொள்ளாச்சி ராமர் கோயில்’’ சுமார் 350 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்ட ஆலயம். இங்கு ராமர்தான் பிரதானம். ஆனால், இந்த கோயிலிலே முதலில் எழுந்தருளியது ஆஞ்சநேயர் ஸ்வாமி. எப்படி இந்த பொள்ளாச்சி ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் குடிக் கொண்டார் என்பது இன்னும் ஆய்வில்தான் இருக்கின்றது. இருந்த போதிலும், இதுவரை நடைபெற்ற ஆய்வின்படி, இந்த பொள்ளாச்சி ராமர் கோயிலில் முதல் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆஞ்சநேயர் ஸ்வாமியைத்தான் என்பது தெரியவருகிறது. ராமர் அல்ல என்றும் தெரிய வருகிறது. ஆகையால், “பொள்ளாச்சி ராமர் கோயில்’’ என்பதற்கு முன்பாக “ஹனுமந்த ராயர் கோயில்’’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

அதனால், “ஹனுமந்த ராயர் கோயில்’’ ஒட்டி உள்ள பகுதியை ஹனுமந்த ராயர் தெரு என்றே அமைத்துள்ளனர். இங்கு சுமார் 500 மத்வ குடும்ப மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் (தற்போது குறைந்துவிட்டது). மத்வ மக்களுக்கும், அனுமாருக்கும் பல தொடர்புகள் உண்டு. அதில், மிக முக்கியமான தொடர்பு என்னவென்றால், மத்வ மக்களின் ஆச்சாரியரான, “ஸ்ரீ மத்வாச்சாரியாரை’’ அனுமா, பீமா, மத்வா என்ற வரிசையில் போற்றப்படுகிறார்.

வேறெங்கோ பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமார்

அதாவது, மத்வாச்சாரியாரின் முப்பிறவிதான் பீமா என்றும், பீமாவின் முப்பிறவி அனுமா என்றும் துவைத சித்தாந்தம் சொல்கிறது. அது இருக்கட்டும்! “ஹனுமந்த ராயர் கோயிலில்’’ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பாக, வேறெங்கோ ஒரு திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், முன்னொரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட ராஜா ஒருவர், (அவரின் பெயர், அவரின் வரலாறுகள் இன்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது) இந்த ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்துவிட்டார், என்கின்ற செவிவழிச் செய்தியும் சொல்லப்படுகிறது. ஆக, 350 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் கோயில் கொண்டிருக்கிறார், இந்த ஆஞ்சநேயஸ்வாமி. அதற்கு முன்பு வேறு ஒரு இடத்தில் ஆஞ்சநேயஸ்வாமி இருந்ததால், கால அளவீட்டினை செய்யமுடியாத நிலை இருக்கிறது.

பாஞ்சராத்திர ஆராதனை

பாஞ்சராத்திர ஆராதனை என்பது, ஸ்ரீ மத்வாச்சாரியாரால் வகுத்து உருவாக்கப்பட்ட 5 இரவு ஆராதனை முறை. இந்த பாஞ்சராத்திர ஆராதனையைதான் தற்போதுள்ள அனைத்து மத்வ கோயில்களிலும் பின்பற்றி வருகின்றன. அதே போல், இந்த “ஹனுமந்த ராயர் கோயிலில்’’ இன்றும் பாஞ்சராத்திர ஆராதனையை பின்பற்றி வருகின்றனர்.

தெற்கு நோக்கி இருந்த அனுமார்

இந்த கோயில் ஆஞ்சனேயஸ்வாமி முதலில் தெற்கே பார்த்தவாறு பக்தர்களுக்கு காட்சியினை கொடுத்துவந்தார். அதன் பிறகே, சீதா மற்றும் ராமரை பிரதிஷ்டை செய்தனர். அவர்களின் அருகிலேயே ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்தனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், சீதா – ராமரை கல்யாண ராமராக பிரதிஷ்டை செய்தனர். இங்கு விசேஷம் என்னவென்றால், அனைத்து ராமர் கோயில்களிலும் ராமர், சீதா, லட்சுமணர், அனுமார் போன்றவர்கள் காட்சிக் கொடுப்பது வழக்கம். இந்த கோயிலில், லட்சுமணர் இருக்க மாட்டார். ராமர், சீதா, மட்டுமே காட்சித்தருவதால், “கல்யாண ராமர்’’ என்றே அழைக்கிறார்கள். ஆகையால் காலப் போக்கில் “ஹனுமந்த ராயர் கோயில்’’, “பொள்ளாச்சி ராமர்’’ கோயிலாக மருவி அழைக்கப்பட தொடங்கினார்கள்.

மிருத்திகா பிருந்தாவனம்

பொள்ளாச்சியில் வசித்து வந்த ராஜம்பாள், பத்மாவதி, வி.வி.ராம் ஆகியோர்கள், இந்த “பொள்ளாச்சி ராமர்’’ கோயிலில், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் மிருத்திகா பிருந்தாவனத்தை ஸ்தாபிக்க எண்ணினார்கள். அதன் படி, அன்றைய மந்திராலய பீடாதிபதிகளிடம் முறைப்படி அனுமதி பெற்று, மந்திராலயத்தில் ஜீவ சமாதியான ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மூல பிருந்தாவனத்தில் இருந்து மிருத்திகையை (மண்) எடுத்து, 1972ஆம் ஆண்டு பொள்ளாச்சி ராமர் கோயிலில் அழகிய பிருந்தாவனத்தை எழுப்பினார்கள். ஆக, முதலில் இந்த கோயிலுக்கு பிரதிஷ்டை ஆனது ஆஞ்சநேயர், அதன் பின் சீதா ராமர், பிறகு ராகவேந்திர ஸ்வாமி.

குதிரையின் இருப்பிடம்

இந்த திருக்கோயில், ஆதியில் குதிரைகள் குடிநீர் அருந்தும் இடமாக இருந்திருக்கிறது. கோயில் சுற்றியும் பார்த்தால்கூட தண்ணீர் அமைப்பாகத்தான் இருக்கும். அருகிலேயே தெப்பக்குளம் இருக்கிறது. அதே போல், இந்த ஏரியாவில் மட்டும்தான் நிலத்தடி நீரானது மிக குறைந்த அடியிலேயே கிடைத்துவிடுகின்றது. ஆகையால், இந்த பொள்ளாச்சி ராமர் கோயில் கட்டும் சமயத்தில்கூட வெளியில் இருந்து லாரிகளிலோ அல்லது வேறு விதத்திலோ தண்ணீரை பயன்படுத்தவில்லை. இங்குள்ள கிணற்றின் மூலமாகவே இந்த முழு கோயிலை கட்ட தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டோம்.

(அதிசயம் தொடரும்…)

The post அதிசயங்கள் நிறைந்த பொள்ளாச்சி ராமர் appeared first on Dinakaran.

Tags : Pollachi Rama ,Pollachi ,Puliyampatti Theppakulam Street… ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி ரேக்ளா...