×

திரைத்துறையினரை குறிவைக்கும் கொரோனா கொல்லுயிரி!: பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பாதிப்பு உறுதி..!!

மும்பை: பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பல மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இரண்டு அலைகளை காட்டிலும், கொரோனா 3வது அலையில் பெரும்பாலான திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.92 வயதான லதா மங்கேஷ்கருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருந்தது தெரியவந்த நிலையில், அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொற்று உறுதியான நிலையில், அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பால் முன்னெச்சரிக்கை நோக்கில் மட்டுமே லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட் திரைப்படங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாடி கோடிக்கணக்கானோரை மகிழ்வித்து வரும் லதா மங்கேஷ்கர், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழி படங்களிலும் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கரின் இசை சேவைக்காக கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டிருந்தது. திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை லதா மங்கேஷ்கர் பெற்றிருக்கிறார். உலகிலேயே அதிக பாடல்களை பதிவு செய்தவர் என்ற கின்னஸ் சாதனையையும் லதா மங்கேஷ்கர் படைத்துள்ளார். சமீப காலத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா, நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ என கொரோனாவால் பாதிக்கப்படுவோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதேபோல், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மது சாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது….

The post திரைத்துறையினரை குறிவைக்கும் கொரோனா கொல்லுயிரி!: பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பாதிப்பு உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Corona ,Lata Mangeshkar ,MUMBAI ,India ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு