×

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு கொரோனா: பட்ஜெட் கூட்டத் தொடர் தள்ளிப்போகுமா?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஒன்றிய பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒமிக்ரான் எனும் புதுவகை கொரோனா வைரஸ் உருவான பிறகு, உலகம் முழுவதும் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் 3வது அலை உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது இதன் பரவல் அசுர வேகத்தை எட்டி உள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் புதிதாக பாதித்துள்ளனர். கடைசியாக கடந்தாண்டு மே 29ம் தேதி 1.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு, அதாவது 224 நாட்களுக்குப் பிறகு தற்போது 1.50 லட்சத்திற்கு மேல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே போல், கடந்த 24 மணி நேரத்தில் 327 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 1,400 ஊழியர்களில் 402 பேருக்கு, கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான நான்கே நாட்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியானது.வரும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, இம்மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்குவதற்கு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில் 4 நாளில் 400 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 200 பேர் மக்களவை மற்றும் 69 பேர் மாநிலங்களவையை சேர்ந்த ஊழியர்கள். 133 பேர் உதவி பணியாளர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்த பல ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 400 ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சூழல் குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 50 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிக்கு வரவும், மற்றவர்கள் வீட்டிலிருந்து பணி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள போவதாக வெங்கையா அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கப்படி இம்மாத இறுதியில் தொடங்கப்படுமா? பட்ஜெட் தாக்கல் தள்ளி வைக்கப்படுமா? என பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதே போல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 32 பேரில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 3 ஆயிரம் ஊழியர்களில் 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 3ம் தேதி முதல் விசாரணைகள் மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்து வருகின்றன. இந்நிலையில், 4 நீதிபதிகளுக்கும், 150 ஊழியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஒன்றிய அரசு அலுவலகங்களில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி பணியாளர்கள் வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டுமென ஒன்றிய பணியாளர் அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.* உபி பிலிபிட் தொகுதி பாஜ எம்பி வருண் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.* பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* பிரதமர் மோடி ஆலோசனைநாட்டின் கொரோனா சூழல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விமானத்துறை, உள்துறை, அமைச்சரவை செயலாளர்கள், ரயில்வே வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதிய சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்தவும், தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தவும் உத்தரவிட்டார். மேலும், புதுப்புது வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், சோதனை, தடுப்பூசிகள், மரபணு வரிசைமுறை உள்ளிட்ட விஷயங்களில் தொடர்ச்சியான ஆராய்ச்சி தேவை என்றும் வலியுறுத்தினார். கொரோனா நிலவரம் நேற்று ஏற்கனவே கடந்த மாதம் 24ம் தேதியும் அவர் ஆலோசனை நடத்தினார்.* மாநிலங்களுடன் ஒன்றிய அமைச்சர் இன்று ஆலோசனைகொரோனா சூழல் மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு ஆகிய யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.* விமான பயணிகள் 173 பேருக்கு தொற்றுஇத்தாலியில் இருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை 125 பேருக்கும், வெள்ளிக்கிழமை 173 பயணிகளுக்கும் விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால், இதில் குளறுபடி இருப்பதாக பயணிகள் புகார் அளித்த நிலையில், ஆய்வு முடிவுகளை வழங்கிய தனியார் ஆய்வகம் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….

The post நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு கொரோனா: பட்ஜெட் கூட்டத் தொடர் தள்ளிப்போகுமா? appeared first on Dinakaran.

Tags : Parliament ,New Delhi ,Dinakaran ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...