திருத்தணி: கே ஜி கண்டிகையில் வார சந்தை நடைபெறும் பகுதியில் மின் விளக்குகள் எரியாததால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகையில் மின்வாரிய அலுவலகம் அருகில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெற்று வருகிறது. பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலைக்கு இருபுறமும் மற்றும் உரம் சேமிப்பு கிடங்கு மைதானத்தில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 500க்கும் கடைகள் வைத்து சிறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஊராட்சி சார்பில் தரை வாடகை, வேன், தள்ளுவண்டி என்று தனித்தனியாக வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கே.ஜி. கண்டிகை உட்பட சுற்றுவட்டாரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் வாரச் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை வாரச்சந்தையில் வியாபாரம் பரபரப்பாக நடைபெறும்.
பஸ், ஆட்டோ, பைக்குகளில் சந்தைக்கு வரும் கிராமமக்கள் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி விட்டு காய்கறிகள் வாங்க செல்கின்றனர். வாரச்சந்தை நடைபெறும் நெடுஞ்சாலையில் மற்றும் மைதானத்தில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் மின் கம்பங்களில் மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளன. மழை காலம் என்பதால், 5 மணிக்கே வானம் இருண்டு விடுவதால், வியாபாரிகள் பேட்டரி விளக்குகள் வைத்துக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
பொருட்கள் வாங்கும் ஆர்வத்தில் இருக்கும் கிராமமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் செல்போன், பணம் நூதனமாக மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் இருசக்கர வாகனங்களும் திருடப்படுகிறது. இதனால், வாரச்சந்தையில் பொருட்கள் வாங்கி செல்ல பொதுமக்கள், விற்பனை செய்ய வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
வாரச்சந்தையில் இருட்டை பயன்படுத்தி நடைபெற்று வரும் திருட்டு தடுக்க மின் விளக்குகள் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், திருட்டு சம்பவங்கள் மற்றும் வாகன விபத்து தடுக்க போலீசார் மாலை மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
* வாகன விபத்து அதிகரிப்பு
கே.ஜி.கண்டிகையில் பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது போதையிலும் மற்றும் மது வாங்கிக் கொண்டும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். வாரச்சந்தை அருகில் மின் விளக்குகள் எரியாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
* வாடகையில் கறார்; வசதிகள் கைவிரிப்பு
வாரச்சந்தையில் கடைகள் மூலம் ஊராட்சிக்கு கனிசமாக வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள், வியாபாரிகள் வசதிக்காக குறைந்த பட்சம் பழுதான மின் விளக்குகள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுககத ஊராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில், குடிநீர், பொது கழிப்பிடம் உள்ளிட்ட குறைந்த பட்ச வசதிகளும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
The post கே.ஜி. கண்டிகையில் வாரச்சந்தை இருண்டு கிடப்பதால் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு: வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.
