சென்னை: ‘வணங்கான்’ படப்பிடிப்பில் நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக சொல்லப்பட்டது குறித்து இயக்குனர் பாலா விளக்கம் தந்துள்ளார். பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் முதலில் சூர்யா, கிரித்தி ஷெட்டி, மமிதா பைஜு நடிக்க இருந்தார்கள். கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகினார். அவரைத் தொடர்ந்து கிரித்தி ஷெட்டி, மமிதா பைஜு நீக்கப்பட்டனர். இதில் மமிதா பைஜு, சூர்யாவின் தங்கையாக நடிக்க இருந்தார். இவர், பிரேமலு மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தவர். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என இயக்குனர் பாலா தன்னை முதுகில் அடித்ததாக மமிதா பைஜு ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாலா அடிக்கவில்லை என திடீரென மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தார் மமிதா பைஜு. இது தொடர்பாக பாலா தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. இப்போது பொங்கலுக்கு ‘வணங்கான்’ படம் வெளியாக உள்ளது. இதற்கான பேட்டிகளில் மமிதா பைஜுவை தாக்கியது தொடர்பாகவும் பாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறும்போது, ‘படப்பிடிப்பில் மேக்அப் போடுவது எனக்கு பிடிக்காது. குறிப்பிட்ட காட்சியில் மேக்அப் போட்டுவிட்டு மமிதா வந்து நின்றார். ஏன் மேக்அப் போட்டாய் என்று சும்மா கை தான் ஓங்கினேன். அவரை அடிக்கவில்லை. அதற்குள் நான் அடித்ததாக செய்தி பரவியது. மும்பையில் இருந்து வந்த பெண் மேக்அப் கலைஞருக்கு என்னைப் பற்றி தெரியாது. அதனால் அவர்தான் ஓவர் மேக்அப் போட்டுவிட்டார் என்பது பிறகு தெரிந்தது’ என்றார்.
The post நடிகை மமிதா பைஜுவை அடித்தேனா? இயக்குனர் பாலா விளக்கம் appeared first on Dinakaran.