×

கார் சக்கரத்தில் சிக்கி நாய்குட்டி சாவு மன்னிப்பு கேட்டு மற்றொரு குட்டியை தத்தெடுத்த டிரைவர்

ஓசூர் : ஓசூரில் குடியிருப்பு பகுதியில், தாயுடன் படுத்து தூங்கிய குட்டி நாயை கார் ஏற்றி கொன்ற டிரைவர், தனது தவறை ஏற்று கொண்டு, மன்னிப்பு கேட்டு விபத்தில் தப்பிய மற்றொரு குட்டி நாயை தத்தெடுத்து கொண்டார். ஓசூர் அன்னை நகர் பகுதியில் வசித்து வரும் நபர், அந்த பகுதியில் கடந்த 27ம் தேதி தனது காரை ஓட்டி சென்றார்.

அப்போது அந்த தெருவில் தெருநாய் தனது 2 குட்டிகளுடன் படுத்து கிடந்தது. அந்த நபர் ஹாரன் அடித்தபடியே சென்றார். அப்போது, தாய் நாயும், அதன் ஒரு குட்டியும் அங்கிருந்து எழுந்து ஓடிய நிலையில், மற்றொரு குட்டி காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பார்ப்பவர்களை கண் கலங்க செய்யும் இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய ஓசூரை சேர்ந்த பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

அதனை தொடர்ந்து குட்டி நாயை காரை ஏற்றி கொன்ற அந்த நபரை வரவழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரை ஓட்டி சென்றபோது, தாய் நாயுடன் ஒரு குட்டி மட்டுமே இருந்ததாக நினைத்து ஹாரன் அடித்ததாகவும், அப்போது 2 நாய்களும் ஓடி விட்டன என நினைத்து காரை இயக்கி சென்றேன்.

ஆனால் மற்றொரு குட்டி நாய் அங்கு படுத்து கிடந்தது தெரியாமல் அதன் மீது காரை ஏற்றி கொன்று விட்டேன் என தனது தவறை ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தாய் நாய்க்கு தேவையான பராமரிப்பு செலவுகளை ஏற்று கொள்வதாகவும், விபத்தில் தப்பிய மற்றொரு குட்டி நாயை தத்தெடுத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரிடம் நடந்த விபரங்களை கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் கலந்தாலோசித்து காரை ஓட்டி வந்தவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து, அவருக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்கு பதிலாக அவரை விலங்குகள் பராமரிப்பாளராக விடுவிக்க முடிவு செய்தனர்.

அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ அறிக்கை மற்றும் வருத்தம் தெரிவித்த வீடியோவை பெற்று கொண்டனர். கார் ஓட்டுநர் உறுதி அளித்தபடி அவர் நாய் குட்டியை தத்தெடுத்து வளர்ப்பதையும், தாய் நாய்க்கு செலவு செய்வதையும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் கண்காணிக்க உள்ளனர்.

அவர் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் பட்சத்தில் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

The post கார் சக்கரத்தில் சிக்கி நாய்குட்டி சாவு மன்னிப்பு கேட்டு மற்றொரு குட்டியை தத்தெடுத்த டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Ozur ,Hosur Annai Nagar ,
× RELATED ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர்...