×

பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் கள ஆய்வு; அடவிநயினார், குண்டாறு அணை பகுதி பூங்காக்கள் விரைவில் சீரமைக்கப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

செங்கோட்டை,டிச.30: பண்பொழி திருமலை குமார சுவாமி கோயில், அடவிநயினார் அணை, குண்டாறு அணை பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அணை பகுதிகளில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணைப் பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குண்டாறு அணைக்கு மேலேயுள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ஜீப்புகள் மேலே செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இதனை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகிறது என்று அமைச்சரிடம், மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரபீக் காதர் முகைதீன் மனு வழங்கினார்.

இம்மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் இதுகுறித்து கலெக்டரிடம் பேசி விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பண்பொழி திருமலைகுமாரசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடர்ந்து கிரிவலப்பாதை, மலைப்பாதை, பூங்கா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அடவிநயினார் அணைப்பகுதியை அமைச்சர் பார்வையிட்டார். வடகரையில் பேரூராட்சி தலைவர் ஷேக்தாவூது, அடவிநயினார் அணையில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அடவிநயினார் அணை, குண்டாறு அணை பகுதியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் விரைவில் சீரமைக்கப்படும்’’ என்றார். ஆய்வின் போது தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி, பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வடகரை ஷேக்தாவூது, இலத்தூர் ஆறுமுகசாமி, பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

The post பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் கள ஆய்வு; அடவிநயினார், குண்டாறு அணை பகுதி பூங்காக்கள் விரைவில் சீரமைக்கப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Panpozhi ,Tirumala Kumaraswamy ,Temple ,Adavinainar ,Gundaru Dam ,Tourism Minister Rajendran ,Sengottai ,Tourism Minister ,Rajendran ,Panpozhi Tirumala Kumaraswamy Temple ,Adavinainar Dam ,Tenkasi ,Adavinainar, ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி