×

1980ல் ராமதாஸ் செய்த சத்தியம் சத்தியமாக என் வாரிசுகளோ, குடும்பமோ இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள்: பேசுபொருளான ராமதாஸின் வாக்குறுதிகள்

சென்னை: 1980ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது ராமதாஸ் செய்த சத்தியங்களை தற்போது நடைபெற்ற சம்பவத்தோடு தொடர்புபடுத்தி அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிறுவனர் ராமதாஸ், தன் மகள்வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார்.

இதற்கு, ராமதாஸின் மகனும், பாமகவின் தலைவருமான அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். மேடையில் பேசிய, அன்புமணி “கட்சியில் சேர்ந்த 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது என்ன நியாயம்? அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு?” எனக் காட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனை கேட்டு கடுப்பான, ராமதாஸ், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது.

கட்சியை விட்டு போவதாக இருந்தால் வெளியேசெல்லுங்கள் வெளியே போ” என ஆவேசமாக கூறினார். உடனே குறுக்கிட்ட அன்புமணி “நீங்கள் சொல்லுங்கள். பண்ணுவதை பண்ணுங்கள் என தொடர்ந்து பேசினார். இருவரின் வார்த்தை மோதலால் மேடையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அடிப்படையில் மருத்துவரான ராமதாஸ், பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களின் உரிமைகளுக்காக பல சங்கங்களை, தலைவர்களை ஒருங்கிணைத்து 1980-ல் வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார்.

அப்போது மூன்று சத்தியங்களையும் செய்தார். அதில், எந்தச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அது என் சொந்தச் செலவில்தான்! எந்தக் காலகட்டத்திலும் நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்! எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட்டேன்! என 3 சத்தியங்கள் செய்தார். உப சத்தியமாக, “என் வாரிசுகளோ, குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள். இவை என் இறுதி மூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

தனது மகன் அன்புமணியை கட்சிப் பொறுப்புகளுக்குக் கொண்டு வந்தபோது, அவரின் சத்தியத்தை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தன்னுடைய மகள் வழிப் பேரனான, முகுந்தனை இளைஞரணிப் பொறுப்புக்கு தற்போது முன்மொழிந்திருக்கிறார். இதனால் 1980-ல் ராமதாஸ் செய்த சத்தியத்தைக் குறிப்பிட்டு அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, அவரது மகனான அன்புமணியே வெளிப்படையாக விமர்சித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

The post 1980ல் ராமதாஸ் செய்த சத்தியம் சத்தியமாக என் வாரிசுகளோ, குடும்பமோ இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள்: பேசுபொருளான ராமதாஸின் வாக்குறுதிகள் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Ramadoss' ,Chennai ,Vanniyar ,Sangam ,PMK ,
× RELATED பொங்கல் தொகுப்புடன் ₹1000 கட்சித்தலைவர்கள் கோரிக்கை