×

அண்ணா பல்கலை. மாணவி போன்று பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வரவேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி போன்று பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வரவேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் அளித்த பேட்டி: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக புகார் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் இப்படி நிகழக்கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று செயல்பட்ட மாணவியின் துணிச்சல் போன்று மற்ற பெண்களும் தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தைரியமாக புகார் அளிக்க முன்வரவேண்டும்.

அப்போது தான், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முதல்வர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கையால் திமுக ஆட்சிக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதால் மீண்டும் திமுக தான் ஆட்சியமைக்கும் என்ற நிலை இருப்பதால், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தை அரசியல் ஆக்கி வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு காரணங்கள் கிடைக்காததால், இதனை வைத்து மலிவு அரசியல் நடத்துகின்றனர். தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.

மணிப்பூர் மாநிலத்தில் இன்று வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தில் எந்த நடவடிக்கைகளையும் பாஜக அரசு எடுக்கவில்லை. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

The post அண்ணா பல்கலை. மாணவி போன்று பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வரவேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anna University ,Minister ,Geethajevan ,Chennai ,Social Welfare and Women's Rights ,Thoothukudi ,Anna University of Chennai ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...