×

நார் சாட்டை வேணாம்பா.. பஞ்சு சாட்டையை கொண்டு வா..படம் காட்டிய அண்ணாமலை

கோவை: டிசம்பர் 27ம் தேதி முதல் 48 நாட்களுக்கு காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும், எனது வீட்டுக்கு முன்பு எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன் என்றும் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள அவரது வீட்டு முன் நேற்று காலை 10 மணிளவில் சாட்டையடி போராட்டத்தை நடத்தினார். காலை 10 மணிக்கு வீட்டின் கதவை திறந்து அண்ணாமலை வெளியே வந்தார். பச்றை நிற துண்டு, பச்சை நிற வேட்டி அணிந்திருந்தார்.

கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து, நெற்றியில் விபூதி பூசியிருந்தார். மொத்தம் 8 முறை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். அவர் ஏற்கனவே அறிவித்தது 6 முறைதான். இதில் 2 முறை சாட்டை கழுத்தில் மாட்டிக்கொண்டதால் 8 முறை அடித்துக்கொண்டார். 8 முறை சாட்டையால் அடித்த பிறகும் மீண்டும் அடிக்க முயன்றார். அப்போது, அவரை சுற்றி நின்றுகொண்டிருந்த பாஜ நிர்வாகிகள் அவரது கையில் இருந்து சாட்டையை பிடுங்கினர்.

இதன்பின்னர், இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து, தோளில் போட்டுக்கொண்டு, அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நான், எனது தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் எனக்கு தோல்வியை தந்தால், அதையும் ஏற்றுக்கொள்வேன்’’ என்றார். தனது வீட்டின் முன்பு சாட்டையடி போராட்டம் நடத்துவதற்கு முன்னதாக அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலை அடிக்க பயன்படுத்தப்படும் சாட்டை என தென்னை நார் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு சாட்டையை செய்தியாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முன்பாக காண்பித்தனர்.

பின்னர், சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த அண்ணாமலையிடம் உதவியாளர் வெள்ளை கலரில் இருந்த ஒரு சாட்டையை கொடுத்தார். அந்த வெள்ளை கலர் சாட்டை மூலம் அண்ணாமலை தன்னைத்தானே அடித்துக்கொண்டார். முன்னதாக ஆதரவாளர்கள் காண்பித்த சாட்டைக்கும், அண்ணாமலை பயன்படுத்திய சாட்டைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது.

ஒரிஜனல் சாட்டை தென்னை நாரில் இருந்து தயாரித்ததும், அண்ணாமலை பயன்படுத்தியது உயர்ரக பஞ்சு மூலம் தயாரித்தது எனவும் இரண்டு சாட்டைகளின் போட்டோக்களையும் இணைத்து போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டனர். இது, “அண்ணே… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்…” என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது.

The post நார் சாட்டை வேணாம்பா.. பஞ்சு சாட்டையை கொண்டு வா..படம் காட்டிய அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Coimbatore ,Tamil ,Nadu ,BJP ,president ,Coimbatore… ,
× RELATED ‘நாளை முதல் காலில் செருப்பு போட...