சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; “மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் அளித்த தகவலே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
செல்போன் சிக்னல், அறிவியல்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம். எஃப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் FIR எனும் முதல் தகவல் அறிக்கை, இணையதளத்தில் தானாகவே லாக் ஆகிதான் இருக்கும். பாதிக்கப்பட்டோரின் விபரங்களை பார்க்க முடியாது.
ஆனால், IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் FIR நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் FIR லீக் ஆகியிருக்கலாம்”
பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டப்படி குற்றம். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி, வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. புகார் கொடுத்த ஒரே நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
ஞானசேகரனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 70 சிசிடிவி கேமராக்களில் 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்யும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லீக் ஆகியிருக்கலாம்.
காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆய்வுக் கூட்டங்களில் முதலமைச்சர் கூறியது. எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. அண்ணா பல்கலை. வளாகத்தில் 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது.
முதல்நாள் நடைபெற்ற விசாரணைக்கு ஞானசேகரன் அழைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டவர் வேறு ஒருவருடன் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஞானசேகரனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
The post எங்களுக்கு எந்த கட்சி பாகுபாடும் கிடையாது; இந்த வழக்கில் சார் என வேறு யாரும் இல்லை: காவல் ஆணையர் அருண் appeared first on Dinakaran.