×

தனியார் ரயில் தாமதத்திற்கு பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது நிறுத்தம்: ஐஆர்சிடிசி தகவல்

புதுடெல்லி: தனியார் ரயில்கள் தாமதம் ஏற்பட்டதற்காக பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு நிறுத்தப்பட்டிருப்பதாக ஆர்டிஐ மனுவுக்கு ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) டிக்கெட் முன்பதிவு மற்றும் தனியார் ரயில் சேவையை நிர்வகிக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2019 அக்டோபர் 4 முதல் டெல்லியிலிருந்து லக்னோ செல்லும் தேஜஸ் ரயிலையும், 2020 ஜனவரி 17 முதல் அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் தேஜஸ் ரயிலையும் இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டாலோ, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

60 முதல் 120 நிமிடங்கள் வரை தாமதமானால் ரூ.100ம், 120 முதல் 240 நிமிடங்கள் தாமதமானால் ரூ.250ம் இழப்பீடாக வழங்கப்பட்டது. ரயில் ரத்து செய்யப்பட்டால், பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். பயணிகளை ஈர்ப்பதற்காக ஐஆர்சிடிசி இந்த சலுகையை அறிமுகம் செய்தது. இந்நிலையில், தனியார் ரயில் இழப்பீடு தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் செய்யப்பட்ட மனுவுக்கு ஐஆர்சிடிசி அளித்த பதிலில், கடந்த பிப்ரவரி 15ம் தேதியே இந்த இழப்பீடு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறி உள்ளது. இந்த நடவடிக்கை ரகசியமானது என்றும் அதற்கான காரணத்தை வெளியிட மறுத்து விட்டது. அதே சமயம், 2024-25ம் ஆண்டில் பயணிகளுக்கு ரூ.15.65 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும், 2019 அக்டோபர் 4 முதல் 2024 பிப்ரவரி 16 வரையிலும் பயணிகளுக்கு ரூ.26 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

The post தனியார் ரயில் தாமதத்திற்கு பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது நிறுத்தம்: ஐஆர்சிடிசி தகவல் appeared first on Dinakaran.

Tags : IRCTC ,New Delhi ,RTI ,Indian Railway Catering and Tourism Corporation ,Ministry of Railways ,Dinakaran ,
× RELATED தட்கல் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி செயலிழந்தது: பயனர்கள் ஆவேசம்