×

கொலை, கொள்ளை குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமியோடு பணியாற்ற முடியாது: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்கான புகார்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் அடிப்படையில் கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் புகழேந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து அனைவரும் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது நிலைப்பாட்டை தனித்தனியாக தெரிவித்தனர்.

இதில் கே.சி.பழனிசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கூறியதில், ‘‘அதிமுக என்ற கட்சியை பொறுத்தவரை அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிமுக சட்ட விதிகளை மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது. எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்காலமாக வழங்கபட்ட அதிமுக பொதுச்செயலாளர் என்ற உத்தரவை ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை. அதிமுக என்ற கட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

இதையடுத்து புகழேந்தி கூறியதில், ‘‘எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் இரட்டை இலை விரைவில் மூன்றாவது முறையாக முடக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல்களை கொடுத்து ஏமாற்றி உள்ளார். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அது அப்பட்டமான பொய்யாகும். அப்படியென்றால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஏன் தோல்வி அடைய வேண்டும்.

எனவே அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் கட்சியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உறுப்பினர் மற்றும் பதவிகளை நியமிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவதே எங்களது முக்கிய கொள்கையாக உள்ளது.

குறிப்பாக கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரான எடப்பாடி பழனிசாமிக்கு கீழே நாங்கள் இருந்து பணியாற்ற விரும்பவில்லை. அதற்கான அவசியமும் கிடையாது. மேலும் அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவுக்கு யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கொலை, கொள்ளை குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமியோடு பணியாற்ற முடியாது: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்கான புகார் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chief Election Commission ,New Delhi ,Chief Election Commission of India ,Court ,Suryamoorthy ,K.C. Palaniswami ,Dinakaran ,
× RELATED அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு...