×

ஊருக்குள் வர தடை, கோயிலுக்குள் வர தடை என தடைகளை உடைத்து அனைவரின் மனதிலும் நுழைந்திருக்கிறார் பெரியார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரியில் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அத்துடன் சென்னை வேப்பேரியில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நினைவு பரிசு வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பெரியார் கைத்தடி மாதிரியை நினைவு பரிசாக வழங்கினார் கி.வீரமணி.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்துகொண்டிருப்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்.கி.வீரமணி அளித்த பெரியாரின் கைத்தடி பரிசுக்கு எதுவும் ஈடாகாது. “பெரியாரின் கருத்துக்கள் உலகமயமாக்கப்பட்டு டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழினம் சுயமரியாதை பெற தனது வாழ்நாள் முழுவதும் பெரியார் உழைத்தார். பெரியார் மறைந்து 51 ஆண்டுகள் ஆனபிறகும் அவரை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்; இதுதான் அவரின் தனித்தன்மை. பெரியாரின் நினைவிடத்திற்கு வந்ததை தாய் வீட்டிற்கு வந்ததை போல் உணர்கிறேன்.

பெரியாரிடம் கற்றிருக்கும் பாடத்தையே கி.வீரமணி இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பெரியாரின் தொண்டராக ஆசிரியர் கி.வீரமணியை வாழ்த்துகிறேன். ஊருக்குள் வர தடை, கோயிலுக்குள் வர தடை, போராட தடை என அத்தனையும் உடைத்தவர் பெரியார். பல்வேறு தடைகளை உடைத்து அனைவரின் மனதிலும் நுழைந்திருக்கிறார் பெரியார். பெரியாரின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. பெரியாரை உலகமயமாக்கி உலகின் பொதுச்சொத்தாக பெரியாரை கொண்டு சேர்த்திருக்கிறோம். ஒற்றுமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் பாடுபட்டவர் பெரியார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஊருக்குள் வர தடை, கோயிலுக்குள் வர தடை என தடைகளை உடைத்து அனைவரின் மனதிலும் நுழைந்திருக்கிறார் பெரியார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Beriyar ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Periyar ,51st Memorial Day ,Tamil Nadu ,MLA ,Chennai Annasala ,Periyar Memorial ,Chennai Vepperi ,Mu K. Stalin ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...