×

குலசாமி – திரை விமர்சனம்

கட்டணம் செலுத்த முடியாத கல்லூரி மாணவிகளுக்கு உதவுவதாக சொல்லி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை நிரந்தரமாக பாலியல் தொழிலில் தள்ளும் கல்லூரி ஒன்றை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. ஆட்டோ டிரைவர் விமல், தன் தங்கையை டாக்டருக்குப் படிக்க வைக்கிறார். மேற்கண்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட தங்கை திடீரென்று கொல்லப்படுகிறார். கொலையாளிகள் யார் என்று விமல் தேடும்போது இதுபோன்ற பல சம்பங்கள் நடக்கிறது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, சாட்சி இல்லாமல் கொடூரமாக கொல்கிறார்.

கடைசியாக அவர் தன் தங்கையைக் கொன்றவர்களை கண்டுபிடித்து துவம்சம் செய்வதே மீதி கதை. குற்றவாளிகளை கொடூரமாக கொல்லும் குலசாமியாகவும், வள்ளல் குணம் படைத்த ஆட்டோ டிரைவராகவும் நடித்துள்ளார் விமல். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக சாமி ஆடுவதில் கவனம் செலுத்திய அவர், நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தான்யா ஹோப், ஹீரோயினாக கணக்கில் காட்டப்படுகிறார். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் பேராசிரியை வினோதினி வைத்தியநாதன் வில்லித்தனம் செய்துள்ளார். ஒரு ஆட்டோ டிரைவர் பல கல்லூரி மாணவர்களைப் படிக்க வைக்கிறார், தவறு நடக்கும் இடத்தில் எல்லாம் ஆஜராகிறார், பலரை பாய்ந்து சென்று அடிக்கிறார் என்று ஏகப்பட்ட பில்டப்புகள்.

தண்ணி அடித்தால்தான் வீரம் பொங்கும் என்ற மறைமுக டாஸ்மாக் விளம்பரமும் செய்துள்ளது படம். கதையும், சம்பவங்களும் நிஜத்தில் நடந்தவை என்றாலும், லாஜிக் இல்லாத காட்சிகள், நேர்த்தியில்லாத காட்சி அமைப்புகள் போன்றவற்றால் குலசாமி கொலைசாமியாக மட்டுமே நிற்கிறார். விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறாராம். வி.எம்.மகாலிங்கத்தின் பின்னணி இசையால் வசனங்கள் காதில் விழவில்லை. வைட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு காப்பாற்றுகிறது. நிஜக்கதையை சொல்ல முயன்ற இயக்குனர் குட்டிப்புலி ஷரவண சக்தி, அதை நிஜம்போல் சொல்லத் தவறிவிட்டார்.

The post குலசாமி – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vimal ,Kulasamy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்