ஏற்காடு : வார விடுமுறையை கொண்டாட, சேலம் மாவட்டம் ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி ஆகிய சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும் உற்சாகம் அடைந்தனர்.வார விடுமுறையை கொண்டாட, நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாக ஏற்காட்டில் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்ததால், தங்கும் விடுதிகள் நிரம்பியது.
நேற்று அதிகாலை, பரவலாக மழை பெய்ததால் குளுமையான சீதோஷ்ணம் நிலவியது. இதனை அனுபவித்தவாறு சுற்றுலா பயணிகள், அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதேபோல் மேட்டூர் அணை பூங்காவிற்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்து, அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சல், சறுக்கு ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர்.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள முதலை, பாம்பு, நரி, புள்ளிமான், கடமான், ஆமை, குரங்கு மற்றும் பறவைகள் உள்ளிட்ட வன விலங்குகளை கண்டு ரசித்தனர். மேலும் பூங்கா வளாகத்தில் செயற்கை அருவி, விலங்குகளின் உருவம் பொறிக்கப்பட்ட கல்தூண்களை பார்த்து ரசித்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
The post வார விடுமுறையை கொண்டாட ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு appeared first on Dinakaran.