×

மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவு, வேலை விரைவு : மகிழ்ச்சியில் விவசாயிகள்

திருத்தணி: விளைநிலங்களில் இறங்கி வேலை செய்ய கிராம மக்கள் ஆர்வம் காட்டாததால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்து வேளாண் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் ஆர்.கே.பேட்டை உட்பட கிராம பகுதிகள் நிறைந்த 10 ஒன்றியங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது.

இப்பகுதிகளில், நெல், கரும்பு, நிலக்கடலை, காய்கறி, மலர்கள் உள்ளிட்ட பயிர் வகைகள் மூன்று போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 1 லட்சம் ஏர்ஸ் பரப்பளவில் நெல் பயிர், 9 ஆயிரம் ஏர்ஸ் பயிர் வகைகள், 6 ஆயிரம் ஏர்ஸ் எண்ணெய் வித்து பயிர் வகைகள், 4 ஆயிரம் ஏர்ஸ் கரும்பு பயிர், காய்கறிகள், பழங்கள் பொறுத்தவரை 25 ஆயிரம் ஏர்ஸ் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாய பணிகளுக்கு தடையின்றி கூலி ஆட்கள் கிடைத்ததால், மூன்று போகமும் தடையின்றி பயிர் சாகுபடி நடைபெற்று விவசாயிகள் மற்றும் கூலி ஆட்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது.

இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில், வேலைக்கு கிராமமக்கள் செல்வதாலும், பெண்களை பொறுத்தவரை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்ய ஆர்வம் காட்டுவதால், விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தது. கூலி ஆட்கள் கிடைக்காததால், விவசாய பணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொழிற்சாலைகள், கட்டிடப் பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது கிராமங்களில் விளை நிலங்களிலும் அவர்களின் கை ஓங்கி உள்ளது. உடல் உழைப்பின்றி செய்யும் பணிகளை நாடி கிராமமக்கள், இளைஞர்கள் செல்வதால், தற்போது விவசாய பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், கார்த்திகை பட்டத்தில் நெல் நாற்று நடவு தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க ஏஜென்டுகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் உட்பட கூலி ஆட்களை அழைத்து வந்து நடவு பணியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக 400 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்து நெல் நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கே.ஜி.கண்டிகை, வீரமங்கலம், சஹஸ்ரபத்மாபுரம், நொச்சிலி, கொத்தகுப்பம், வடகுப்பம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் நாற்று பறித்து நேர் வரிசையில் நடவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

* 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணி

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஒய். வேணுகோபால்ராஜ் கூறுகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால், கிராமங்களில் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உடல் உழைப்பின்றி 100 நாள் வேலை கிடைப்பதால், கிராமங்களில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் 100 நாள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து வேளாண் பணிகளுக்கு வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்ப்படுத்தும் வகையில் அரசின் விதிமுறைகளை மாற்றி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

* கரும்பு வெட்டு கூலி டன்னுக்கு ரூ.800

தற்போது கரும்பு அறுவடை நடைபெற்று வருவதால், ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து கூலி ஆட்கள் ஏஜெண்டுகள் மூலம் வரவைக்கப்பட்டு டன் ஒன்றுக்கு ரூ.800 கூலி நிர்ணயம் செய்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரும்பு வெட்டி, கட்டு போட்டு வாகனத்தில் ஏற்றும் வரை அனைத்து பணிகளும் செய்வதால், விவசாயிக்கு வேலை குறைந்து செலவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கரும்பு விவசாயி சுதாகர் ராஜ் தெரிவித்தார்.

* ஏக்கருக்கு ரூ.4500 கூலி

வீரமங்கலம் விவசாயியான அரி கூறுகையில், உள்ளூரில் கூலி ஆட்கள் பிரச்னைக்கு இடையில் ஆட்கள் வைத்து நாற்று நடும் பணிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்போது ஏஜெண்டுகள் மூலம் வட மாநிலங்களிலிருந்து விவசாய பணிகளுக்கு தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகள் நடைபெற்று வருகிறது. நாற்று பறித்து கட்டு கட்டி நிலத்திற்கு எடுத்து வந்து வரிசைப்படி நாற்று நடுவது உட்பட அனைத்து பணிகளும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4500 மட்டும் கூலி நிர்ணயம் செய்து பணிகளில் ஆர்வமாகவும், விரைவாக தரமான முறையில் வேலை செய்து வருகின்றனர். இதனால் செலவு குறைந்து பணி தரமாக உள்ளது என கூறினார்.

The post மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவு, வேலை விரைவு : மகிழ்ச்சியில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Northern ,THIRUTHANI ,NORTHERN STATE ,Thiruvallur district ,
× RELATED மேட்டூர் அருகே சோதனைச் சாவடியில்...