சென்னை: பயணிகள் ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த இந்திய ரயில்வே துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நீண்ட வரிசையில் ரயில் டிக்கெட் எடுக்கக் காத்திருக்காமல், யுடிஎஸ் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை எடுக்க முடியும். இந்நிலையில், இந்த ஆப் மூலம் டிக்கெட் எடுத்தால் சலுகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில்வே வாரிய உத்தரவின்படி, 20 டிசம்பர் 2024 முதல் ரயில் பயணிகள் ஆர்-வாலெட் பயன்படுத்தி யுடிஎஸ் மொபைல் ஆப் அல்லது ஏடிவிஎம் (ஆட்டோமேட்டிக் டிக்கெட் வென்டிங் மிஷின்) மூலம் யுடிஎஸ் டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கப்படும். இதற்கு முன்பு, ஆர்-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது. இந்த புதிய வசதி, அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை யுடிஎஸ் மொபைல் செயலியில் உள்ள ஆர்-வாலெட் அல்லது ஏடிவிஎம் மூலம் வாங்கும் ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்க்கும் விதமாக, யுடிஎஸ் மொபைல் ஆப்பை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
The post ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.