×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், வங்கக் கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது தற்போது மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்தது. இதற்கிடையே சில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட கூடுதாகவும் இருந்தது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இயல்பைவிட கூடுதலாக 5 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும், தஞ்சாவூர், கோவை, தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், சென்னை, நீலகிரி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, கோவை, மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து (புவனேஸ்வர் பகுதி) இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து (கொல்கத்தா கடலோரப் பகுதி) செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக 26ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி வரை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா- ஒடிசா கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,West-central Bay of Bengal ,Southwest Bay of Bengal ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக...