×

குமரி அருகே நடத்தை சந்தேகத்தால் கொடூர கொலை; மனைவி உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர்: காட்டி கொடுத்த தெரு நாய்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொன்று 10 துண்டுகளாக கூறு போட்டு பேக்கில் மறைத்துக் கொண்டு சென்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெரு நாய்கள் சுற்றி வளைத்ததால் போலீசில் சிக்கினார். திருநெல்வேலி பாளையங்கோட்டை மணக்காவலம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரிய சத்யா (30). தூத்துக்குடியில் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே மரிய சத்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை மாரிமுத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் பேசி 2 பேரையும் சமாதானம் செய்துள்ளனர். இருவரும் மாறி, மாறி சண்டை போட்டு வந்ததால், குழந்தைகள் இருவரையும் பாளையங்கோட்டையில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர்.

இந்த தகராறு காரணமாக மரிய சத்யா வேலையை விட்டும் நின்றார். அதன் பின்னரும் தகராறு ஓய வில்லை. இந்தநிலையில் உறவினர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, கணவன், மனைவி 2 பேரும் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வந்தனர். அஞ்சுகிராமம் பால்குளம் அருகே உள்ள அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினர். மாரிமுத்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இங்கு வந்த பின்னரும் தகராறு ஓயவில்லை. நேற்று மதியமும் இரண்டுபேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து திடீரென வீட்டில் இருந்த வெட்டு கத்தியை எடுத்து தனது மனைவியின் தலையை துண்டாக்கினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது கை, கால்கள், உடல் பாகங்களை துண்டு, துண்டுகளாக வெட்டியுள்ளார். 10 துண்டுகளாக வெட்டியவர், உடல் பாகங்களை தண்ணீரில் கழுவினார்.

ஏற்கனவே வீட்டில் இருந்த 3 டிராவல் பேக்குகளில் உடல் பாகங்களை வைத்தார். தலையை ஒரு பேக்கிலும், மற்ற பாகங்களை மீதி 2 பேக்குகளிலும் வைத்துக் கொண்டு நேற்று இரவு 9.30 மணியளவில் வெளியே கொண்டு வந்துள்ளார். அப்போது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் கேட்ட போது வீட்டை காலி செய்ய போகிறேன். என் மனைவி திருந்தியபாடில்லை என கூறி உள்ளார். ஆட்டோவுக்காக அவர் பேக்குடன் நின்று கொண்டிருந்த நேரத்தில், அந்த பகுதியில் நின்ற நாய் ஒன்று அருகில் வந்து குரைக்க தொடங்கியது. மாரிமுத்து வைத்திருந்த பேக்குகளை சுற்றி, சுற்றி வந்த நாய் விடாமல் குரைத்தது. சிறிது நேரத்தில் வேறு சில நாய்களும் வந்து பேக்கை மோப்பம் பிடித்து குரைத்தன. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பேக்கை திறந்து பார்த்த போது தான், மரிய சத்யாவை கொன்று உடலை துண்டு, துண்டாக கூறு போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் பாகங்கள் இருந்த பேக்குகளை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரிமுத்துவை, அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் வசித்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது ரத்த கறைகள் கழுவி சுத்தம் செய்திருந்தது தெரிய வந்தது. பின்னர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர் பரபரப்பு வாக்குமூலமும் அளித்துள்ளார். துண்டு, துண்டாக இருந்த மரிய சத்யாவின் உடல் பாகங்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

உடலை வெட்டும்போது சத்தம்
மரிய சத்யாவை கொலை செய்த பின், உடலை துண்டு, துண்டாக மாரிமுத்து வெட்டி உள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சத்தம் என்று கேட்ட போது, துணிகளை காய போட ஆணி அடிப்பதாக கூறி உள்ளார். மரிய சத்யாவை எங்கே என கேட்ட போது குளித்துக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார். உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டிய மாரிமுத்து, பின்னர் அரை மணி நேரம் வரை தண்ணீரில் கழுவி உள்ளார்.

ஆத்திரத்தில் கழுத்தில் வெட்டினேன்
கைதான மாரிமுத்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் கூலி வேலைக்கு செல்வதோடு, இறைச்சி வெட்டும் வேலைக்கும் சென்று வந்தேன். என் மனைவி அடிக்கடி போனில் பேசுவார். எனக்கு இது பிடிக்கவில்லை. நான் பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. நாங்கள் 40 நாட்களுக்கு முன் பால்குளம் வந்து குடியேறினோம். இங்கு வந்த பின்னரும் தகராறு நீடித்தது. நேற்றும் மரிய சத்யா என்னை அவ மரியாதையாக பேசினாள். இதனால் ஆத்திரத்தில் கழுத்தில் வெட்டினேன்.

இதில் அவர் இறந்தார். பின்னர் உடலை மறைக்க திட்டமிட்டேன். உடலை யாருக்கும் தெரியாமல் பேக்கில் அடைத்து வைத்து, வீசி விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி உடலை துண்டு, துண்டாக வெட்டினேன். பேக்கில் வைத்து கொண்டு சென்ற போது நாய் குரைத்ததால் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post குமரி அருகே நடத்தை சந்தேகத்தால் கொடூர கொலை; மனைவி உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர்: காட்டி கொடுத்த தெரு நாய்கள் appeared first on Dinakaran.

Tags : NEAR KUMARI ,Nagarko ,Anjukramam ,Kanyakumari district ,Tirunelveli Palaiangkottai Manakawalam ,Kumari ,
× RELATED குவாரி அதிபருடன் இளம்பெண் உல்லாசம்...