×

அயப்பாக்கம் சாலையில் இளம்பெண்ணை முட்டி தள்ளிய 2 மாடுகள்: சிசிடிவி வீடியோ வைரல்

ஆவடி: அயப்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷோபனா என்ற இளம்பெண்ணை 2 மாடுகள் விரட்டி சென்று முட்டித் தள்ளும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவி, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோணாம்பேடு முதல் அயப்பாக்கம் வரையிலான சாலையில் நாள்தோறும் ஏராளமான மாடுகள் கேட்பாரற்ற நிலையில் சுற்றி திரிகின்றன. அயப்பாக்கத்தில் மிகவும் குறுகலான 3 கிமீ சாலையில் மாடுகள் நின்றிருப்பதால், அங்கு வாகன போக்குவரத்து கடுமமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைகின்றனர். இந்நிலையில், ஆவடியில் இருந்து அயப்பாக்கம் நோக்கி குறுகலான சாலையில் ஷோபனா என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 மாடுகள் விரட்டி சென்று, இருசக்கர வாகனத்தில் சென்ற ஷோபனா கீழே முட்டி தள்ளின.

எனினும், அவரை அந்த 2 மாடுகளும் சரமாரி முட்டிக் கொண்டே இருந்தன. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் சக வாகன ஓட்டிகளும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து, இளம்பெண்ணை முட்டி தள்ளிய 2 மாடுகளையும் விரட்டியடித்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ஷோபனாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு 108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், படுகாயம் அடைந்த ஷோபனா வலியில் கதறி துடித்தார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடிப்பதற்கு வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. அதற்குரிய ஆட்களை நியமிக்கப்பட்டு மாடுகள் பிடிக்கப்படும். சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் பலமுறை அறிக்கை விட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post அயப்பாக்கம் சாலையில் இளம்பெண்ணை முட்டி தள்ளிய 2 மாடுகள்: சிசிடிவி வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Ayapakkam road ,Avadi ,Shobana ,Ayapakkam ,Avadi Corporation… ,Dinakaran ,
× RELATED ஆவடி மாமன்ற கூட்டத்தில் 119 தீர்மானம் நிறைவேற்றம்