புழல்: புழல் தண்டனை சிறையில் வழக்கமான சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று ஜெயிலருக்கு கைதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, கைதிகளிடையே கஞ்சா, குட்கா, செல்போன் புழக்கம் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தண்டனை சிறையில் பொறுப்பு ஜெயிலர் மணிகண்டன் தலைமையில், சிறை காவலர்கள் நேற்று வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது, கைதிகளான மணவாளன், கார்த்திக், இளந்தமிழன் ஆகியோர் செல்போன் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், அவர்களது அறையை சோதனை மேற்கொள்ள ஜெயிலர் சென்றார்.
அப்போது, அவரை தடுத்தி நிறுத்திய கைதிகள், ‘‘இங்கு யாரும் செல்போன் பயன்படுத்தவில்லை. திரும்பி செல்லுங்கள். மீறி சோதனை நடத்தினால், நீங்கள் கடலூர் சிறையில் பணியாற்றியபோது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுபோல், தற்போது மீண்டும் உங்களது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ஜெயிலர் மணிகண்டன், இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கைதிகள் மணவாளன், கார்த்திக், இளந்தமிழன் ஆகிய 3 பேர் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டியது உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என கைதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post புழல் சிறையில் சோதனைக்கு எதிர்ப்பு பெட்ரோல் குண்டு வீசுவதாக ஜெயிலருக்கு கொலை மிரட்டல்: 3 கைதிகளிடம் விசாரணை appeared first on Dinakaran.
