×

அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமராகவே ஆகியிருக்க முடியாது: அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்

பெங்களூரு: அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமராகவே ஆகியிருக்க முடியாது என்று அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்தின்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசினார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், கடும் கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் நிருபர்களை சந்தித்த அமித்ஷா, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘அம்பேத்கர் பற்றி பாஜ உள் மனதிற்குள் இருக்கும் கருத்துகளையும், நிலைப்பாட்டையும் பகிரங்கமாகவும், மிகுந்த தைரியத்துடனும் வெளிப்படுத்தியதற்காக உங்களை (அமித்ஷா) வரவேற்கிறேன். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறீர்கள். அந்த கருத்துகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறி மனசாட்சிக்கு துரோகம் செய்ய வேண்டாம். அம்பேத்கர், இந்த நாட்டுக்காக ஆற்றிய சமூக பணிக்காக, அவரது வழியில் செயல்படும் கோடிக்கணக்கான மக்கள் உங்களது கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டார்கள்.

அம்பேத்கர் போன்ற ஒருவர், இந்த நாட்டில் பிறக்கவில்லை என்றால், என்னை போன்றவர்கள் முதல்வராகி இருக்க வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும். மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருக்க முடியாது. அம்பேத்கர் வகுத்து கொடுத்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நீங்களும் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கிறீர்கள். அவர் மட்டும் இல்லை என்றால் நீங்கள் எங்கேயோ பழைய இரும்பு கடையை வைத்து கொண்டிருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரதமரான, உங்களது நண்பர் மோடி, ரயில் நிலையத்தில் டீ விற்று கொண்டுதான் இருக்க வேண்டும். பிரதமராகி இருக்க முடியாது.

பாபாசாகேப்பின் பார்வைதான் நம் அனைவரையும் உயர்த்தியது. பிரதமர்கூட இதை ஒப்புக்கொள்ளலாம், நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை, அவர் இருக்கும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு எதற்காக ஒப்பு கொள்ளவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. பாஜ, சங் பரிவார் அமைப்புகளும் மோடி, மோடி, மோடி என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. மோடியின் பெயரை அத்தனை முறை சொல்வதற்கு பதில் கடவுள் பெயரை சொல்லி இருந்தால், ஏழு ஜென்மம் மட்டும் அல்ல, நூறு ஜென்மத்திற்கு சொர்க்கத்திற்கு செல்லலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமராகவே ஆகியிருக்க முடியாது: அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Modi ,Sidharamaya ,Amitshah ,Bangalore ,Siddaramaiah ,Union Interior Minister ,Amitsha ,Congress ,Sidharamaya Bharappu ,Dinakaran ,
× RELATED அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ்