×

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நேற்று நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை, ‘நம்முடைய குகேஷை’ பாராட்டுகிறேன். சீன நாட்டை சேர்ந்த சாம்பியனை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார் குகேஷ். புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்முடைய பையன், சென்னை பையன், அதனால்தான் இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. இங்கே எதிரே அமர்ந்திருக்கக்கூடிய அவருடைய பெற்றோரைப்போல தான் நானும் மகிழ்ச்சியிலும், பெருமையிலும் இருந்து கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றதும் குகேஷ் கொடுத்த ஒரு பேட்டியைப் பார்த்தேன் படித்தேன்.

‘‘விளையாட்டுத் திறமையோடு சேர்ந்து சிறந்த குணம், மன உறுதி ஆகியவையும் இணைந்ததால் தான், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்று அவர் சொல்லி இருந்தார். அவர் சொன்ன விளையாடும் திறன், சிறந்த குணம், மனஉறுதி மட்டுமல்ல எப்போதும் புன்னகையோடு இருக்கும் அவரின் முகமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் தான், அந்த வெற்றிக்கு காரணம், உலகின் இளைய செஸ் சாம்பியனாக மாற வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் நனவாக்கியிருக்கிறார். 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து, 9 வயதில் ‘கேண்டிடேட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, 12 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, இன்று உலக செஸ் சாம்பியன் ஆகிவிட்டார்.

இதையெல்லாவற்றையும் சாதிக்க நம்முடைய குகேஷ் எடுத்துக்கொண்டது, வெறும் 11 ஆண்டுகள்தான். இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் இவையெல்லாமே தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோருக்கும் உத்வேகமாக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் உங்களையெல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழாவை நடத்துகிறோம். “ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும். குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனதை பாராட்டும் வகையில், அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி பரிசு அறிவித்திருக்கிறோம். இந்த மேடையில் அதை வழங்கி இருக்கிறோம். 2001ம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாக இங்கிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் பரிசு பெற்றார். அவரைப் பாராட்டும் வகையில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் இதேபோன்ற ஒரு பாராட்டு விழாவை சென்னையில் நடத்தினார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி நகரில், ஆனந்த்துக்கு வீடு வழங்கிப் பாராட்டினார் முதல்வர் கலைஞர். 2007ம் ஆண்டு 2வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் வென்றபோது, ரூ.25 லட்சம் நிதி வழங்கி பாராட்டினார் முதல்வர் கலைஞர். விஸ்வநாதன் ஆனந்த் 2 முறை உலக சாம்பியன் பட்டங்கள் பெற்றபோதும் சரி – இப்போது குகேஷ் உலக சாம்பியன் ஆகும் போதும் சரி, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, பாராட்டி பெருமைப்படுத்தும் வாய்ப்பு திமுக அரசுக்கு கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

திமுக அரசு என்பது விளையாட்டுத் துறையையும், விளையாட்டு வீரர்களையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் அரசு. அதனால் தான், அரசு பொறுப்பேற்றது முதல், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில், விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அதில் சிறப்பம்மாக சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், விளையாட்டுத் துறையில் அரசின் முதல் மிகப்பெரிய வெற்றியே, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியது மூலமாக கிடைத்தது.

இந்த போட்டியின் தொடக்க விழாவையும், செஸ் வீரர்களுக்கு நாம் வழங்கிய விருந்தோம்பலையும், நிறைவு விழாவையும் உலகம் முழுவதும் பாராட்டினார்கள், அந்த விழாக்கள் தமிழ்நாட்டின் வரலாற்றையும், பெருமையையும் திராவிட மாடலின் அடித்தளத்தையும் இந்த உலகத்திற்கே எடுத்துக்காட்டியது. விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக சி.ஐ.ஐ. அமைப்பு தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறது. தி இந்து ”Sport Star Aces” விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2023ம் ஆண்டுக்கான “விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்” விருது தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் என்று தமிழ்நாட்டை சொல்லும் அளவுக்கு விளையாட்டுத் துறையை சிறப்பாக கவனித்து வரும் துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டுகள், அவருக்கு துணையாக செயல்படும் அரசு அலுவலர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.

செஸ் விளையாட்டை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது என்னவென்றால், இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இப்படி இன்னும் பல திறமை வாய்ந்த சதுரங்க வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்க, உருவாக்க, ஒரு திட்டத்தை இந்த விழாவின் மூலம் அறிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் (Home of Chess) என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்.

குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இந்த சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். செஸ் என்பது வெறும் மைன்ட் கேம் மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஏராளமான பாடங்களை வழங்கக்கூடியது. இங்கு செஸ் விளையாட்டின் நுணுக்கங்கள் தெரிந்த பல பேர் இருக்கிறீர்கள். எனக்கு ஓரளவு தெரியும். உங்களுக்கு நன்றாகத் தெரியும். வெற்றிக்காக சில நேரங்களில் செஸ் காயின்களில் மிகவும் சக்தி வாய்ந்த ராணியை கூட தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.

நாம் விரும்பி நம்முடைய காய்களை வெட்டுக்கு கொடுத்து, வெற்றியைப் பெறுவோம், அதுபோல, வாழ்க்கையில் வெற்றி பெற, நம்முடைய லட்சியத்தில் வெற்றி பெற நாம் எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்கவேண்டும். இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக சொல்லிக் கொள்ள விரும்புவது, வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை, பங்கேற்பதுதான் முக்கியம். கொரட்டூரில் பிறந்த குகேஷ் இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்த வரலாறு உங்களுக்கு வழிகாட்டட்டும். இவ்வாறு அவர் பேசினார். பாராட்டு விழாவில், குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிய போது, மேடையின் கீழ் அமர்ந்திருந்த குகேஷ் பெற்றோரை மேடைக்கு அழைத்து, அவர்கள் முன்னிலையில் குகேஷுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கி பாராட்டி, பெற்றோரையும் சிறப்பித்தார்.

* இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
* உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசு வழங்கப்பட்டது.
* பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.5 கோடி வழங்கப்பட்டது.

The post தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Sports Development Authority ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Home of Chess ,Kukesh ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு