புதுடெல்லி: வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருடன் நிற்போம் என்ற வாசகம் எழுதிய கைப்பையுடன் பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் திங்களன்று பூஜ்ய நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக அரசு குரல் கொடுக்க வேண்டும், வங்கதேச அரசுடன் விவாதிக்கவேண்டும், வலியில் இருப்பவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி போராட்டம் நடத்தினார். வங்கதேசத்தின் சிறுபான்மையினருடன் நிற்கிறோம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனம் என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
The post நாடாளுமன்ற வளாகத்தில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி போராட்டம் appeared first on Dinakaran.