- முல்லைப் பெரியாறு
- கேரளா
- பாசனம்
- அமைச்சர்
- திருவனந்தபுரம்
- பாசன அமைச்சர்
- ரோஷி அகஸ்டின்
- முல்லை பெரியார் அணை
திருவனந்தபுரம்: தற்போதைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான பிரச்னை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. தற்போதைய சூழலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது.
ஒவ்வொரு கட்டத்திலும் நீர்மட்டத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பது பரிசோதனைகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியும். கடந்த பல வருடங்களாக இந்த கோரிக்கையைத் தான் கேரளா முன்வைத்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீரும், கேரளாவுக்கு பாதுகாப்பையும் உறுதி செய்து புதிய அணை என்ற கேரளாவின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் ஏற்படும் என கருதுகிறோம்.
புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கை கேரள அரசிடம் தயார் நிலையில் உள்ளது. குத்தகை நிலத்தில் தான் ஆனவச்சால் பகுதி வாகனம் நிறுத்தும் இடம் இருப்பதாக தமிழ்நாடு கூறியது.
ஆனால் அது கேரளாவுக்கு சொந்தமான நிலம் என்று இந்திய சர்வே துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விவரம் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகையில் அல்லாத கேரளாவுக்கு சொந்தமான ஒரு சென்ட் நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உச்சநீதிமன்றத்திற்கும் ஏற்பட்டுள்ளது என்பது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் மூலம் தெரிகிறது. இது கேரளாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது: கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.