×

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மறுப்பு; காங்கிரஸ் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க மறுப்பதை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பாக அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரத்தை அடக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்காதது குறித்தும் விவாதிப்பதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உரிய விதிப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியினர் அனுமதி மறுத்ததை கண்டித்து நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஏற்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, அதானி உள்ளிட்ட 8 பேர் இணைந்து ரூ.2000 கோடிக்கு மேலாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து சூரிய ஒளி மின் திட்டங்களை பெற்றிருப்பதை ஆதாரத்தோடு அறிக்கையாக வெளியிட்டது. அதானி உள்ளிட்டோரை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இதைவிட இந்தியாவிற்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

அதேபோல, வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இயற்கை வளங்கள் மிகுந்த அழகிய மாநிலமாக இருந்த மணிப்பூரில், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி கலவரம் வெடித்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இனக் கலவரத்தினால் மணிப்பூர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க பிரதமர் மோடி முன்வராததை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முயற்சிகள் மேற்கொண்டன. மோடியின் இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாக இந்தியாவில் மணிப்பூர் மாநிலம் இருக்கிறதா என்கிற கேள்வி இன்றைக்கு எழுந்துள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அனுமதி மறுத்ததன் விளைவாக மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டு செல்கிற வகையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி ஆட்சியின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மறுப்பு; காங்கிரஸ் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: செல்வபெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Congress ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Selva Berundaga ,House ,Selva Bharundaga ,Governor ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி செல்வபெருந்தகை அறிவிப்பு