×

அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரையும் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: முகாம் நீதிமன்றம் அமைக்க சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை

சென்னை: கடந்த 2011-15ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,222 பேரில் 150 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 145 பேர் நேரில் ஆஜராகி இருந்தனர். செந்தில்பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜரானார்.

அப்போது, குற்றம்சாட்டப்ப அனைவரும் தங்கள் தரப்புக்கு வாதாட வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 150 பேர் வரும் ஜனவரி மாதம் 6,7,8 ம் தேதிகளில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சிலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், இந்த வழக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட எனது கட்சிக்காரர்களை போலீசார் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். குற்ற வழக்கை பொறுத்தமட்டில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து விசாரிக்க வேண்டும். அப்போது தான் விசாரணை குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தெரியவரும்.

அதற்கு வசதியாக, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் ஆஜராகும் வகையில் இந்த வழக்கின் விசாரணையை நேரு விளையாட்டு மைதானம் அல்லது தீவுத்திடல் போன்ற இடங்களில் முகாம் (கேம்ப்) நீதிமன்றம் அமைத்து நடத்த வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பதற்கு கூடுதல் ஊழியர் உள்ளிட்ட பிற வசதிகள் கோரப்பட்டுள்ளது. அதேவேளையில் குற்றச்சாட்டு பதிவு போன்ற முக்கியமான கட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

The post அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரையும் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: முகாம் நீதிமன்றம் அமைக்க சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Chennai ,Chennai Central Crime Branch ,Minister ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED பொய்யான வீடியோ பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு..!!