×

கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கு கலை போட்டிகள்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில், கலைத்திறன் மிக்க மாணவ, மாணவியர்களுக்கு கலைப்போட்டிகள் நடைபெறவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு சவகர் சிறுவர் மன்றம் மாணவ, மாணவியர்களை கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 5-8, 9-12, 13-16 வயது பிரிவு சிறார்களுக்கிடையே குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில், முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு அரசின் சார்பில் பாராட்டுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகள், செங்கல்பட்டு, தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் 22.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 1 மணி வரை போட்டிகள் நடைபெறும். குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை.

நாட்டுப்புற நடனப்போட்டியில் நமது பாரம்பரிய கரகம், ஒயில், காவடி, தப்பாட்டம், போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெறவேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும். போட்டியாளர்கள் ஆதார் அட்டை நகல் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். மேலும், விவரம் வேண்டுவோர்கள் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631 502, தொலை பேசி எண். 044 – 2726 9148 அல்லது 75027 85549 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க செங்கல்பட்டு மாவட்ட மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கு கலை போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Art and Culture Department ,Chengalpattu ,Collector ,Arunraj ,Chengalpattu District ,Tamil Nadu Government Children's… ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி