×

அடுக்குமாடி தொகுப்பு வீடு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் இரு முறை கொடுத்த மனு மாயம்: வாராந்திர மனுநீதிநாளில் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

செங்கல்பட்டு: அடுக்குமாடி தொகுப்பு வீடு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் இரு முறை கொடுத்த மனு மாயம் என அலட்சியமாக பதிலளித்ததால், வாராந்திர மனுநீதிநாள் நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் கேள்விமேல் கேள்வி கேட்டதால் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூர் அடுத்த கண்டிகை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் சின்னையா பெருமாள்(69). இவர், கடந்த 1991ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாளடைவில் அவரது மகன் உன் பெயரில் உள்ள சொத்தை எனது பெயரில் எழுதி வைக்காவிட்டால் எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறாள் என காரணம் காட்டி ஏமாற்றி சின்னையா பெருமாள் சொத்து முழுவதையும் எழுதி வாங்கிக்கொண்டு முதியவரை சரியான முறையில் கவனிக்காமல் நிர்க்கதியாக விட்டுவிட்டதால் தமிழக அரசு சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த முருகமங்கலம் மற்றும் கீரப்பாக்கம் பகுதியில் வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கக்கோரி வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2022ம் ஆண்டு மனு அளித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு பழைய கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாமிலும் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் நேரடியாக வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சின்னையா பெருமாள் கேட்டதற்கு மனுவை காணவில்லை என அலட்சியமான பதிலளித்துள்ளனர். அதேபோல், செங்கல்பட்டில் நடந்த சிறப்பு முகாமில் அளித்த மனுவும் காணவில்லை என தெரியவந்தது. எனவே, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மனுநீதிநாள் நிகழ்ச்சியில் கடந்த 2022ல் கொடுத்த மனுவும் காணவில்லை என இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பதிலளிப்பதுதான் முறையா? நான் கொடுத்த மனு எங்கே எனவும், முன்னாள் ராணுவ வீரரான எனக்கே இந்த நிலை என்றால் படிக்காத விவரம் தெரியாத மக்களின் நிலை என்ன என்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சின்னையா பெருமாள் நேற்று ஆங்கிலத்திலும், தமிழிலும் சரமாரியாக அதிகாரிகளை கேள்விமேல் கேள்வி கேட்டதால் அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் வாயடைத்து போன சம்பவம் கூட்டரங்கில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

The post அடுக்குமாடி தொகுப்பு வீடு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் இரு முறை கொடுத்த மனு மாயம்: வாராந்திர மனுநீதிநாளில் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Vandalur ,Kandigai Uthukuli… ,
× RELATED வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க...