×

காஞ்சி மீனாட்சி மருத்துவ கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா இட்லி பாட்டிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழாவில், 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் இட்லி பாட்டிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ வேந்தரும், தலைமை புரவலருமான கோமதி ராதாகிருஷ்ணன், இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் மோகனின் நீரிழிவு நோயிற்கான சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.மோகன் கலந்துகொண்டு, 832 மருத்துவ கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில், சுகாதாரத்துறையில் டாக்டர் வி.மோகன் செய்த அசாதாரண பங்களிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் படி, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், நுண்ணியல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஆர்.சுரேஷ் பாபுவுக்கு பட்டமும், 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் “இட்லி பாட்டி’’ என அழைக்கப்படும் கமலாத்தாள் என்ற மூதாட்டிக்கு ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பரிசு, மகத்தான மனிதாபிமான சேவைக்கான விருதும், ரூ.2 லட்சத்திற்கான உதவிதொகையும் வழங்கப்பட்டது.

விழாவில், 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் 24 முனைவர் பட்ட மாணவர்கள் என மொத்தம் 832 பேர் பட்டங்களை பெற்றனர். மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், மருத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 76 பேர், படிப்பில் தனித்துவமான வெற்றியை அடைந்ததற்காக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். விழாவின் மருத்துவ பட்டமளிப்பு மாணவி ஹரிதாகுமாரி மொத்தம் 11 பதக்கங்களையும், மாணவன் குருபிரசாத் மாணவன் 9 பதக்கங்களையும் பெற்றனர். விழாவில், இந்நிறுவனத்தின் 8 சிறந்த பழைய மாணவர்களுக்கு “கோமதி ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த பழைய மாணவர் விருது 2024’’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை வேந்தர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

The post காஞ்சி மீனாட்சி மருத்துவ கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா இட்லி பாட்டிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,convocation ceremony ,Kanchi Meenakshi Medical College ,Idli Patti ,convocation ,Kanchipuram Meenakshi Medical College ,Kanchipuram Meenakshi Higher Education ,Research Corporation ,18th Annual Convocation Ceremony ,Enathur, Kanchipuram… ,18th Convocation Ceremony ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...