×

மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்: உடனடியாக கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அரசிலமைப்பு 129வது சட்ட திருத்தம் உள்ளிட்ட 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்த மசோதாவுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், நேற்றே மக்களவையில் 2 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளார். அப்போது அவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என தெரிகிறது. இந்த மசோதாக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என்பதால், தாக்கல் செய்த உடனேயே நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு அனுப்ப ஒன்றிய அமைச்சர் மேக்வால், சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டுக்குழுவில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் எம்பிக்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். கட்சிகளின் பலத்தை பொறுத்து ஒவ்வொரு கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். அதிக எம்பிக்களை கொண்டிருப்பதால் பாஜ எம்பியே குழுவின் தலைவராக இருப்பார். உடனடியாக கூட்டுக்குழு உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொள்வார். இன்று மாலையே கூட்டுக்குழு விவரங்கள் இறுதி செய்யப்படும். இக்குழுவுக்கு வழக்கமாக 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதில் மசோதா குறித்து தீவிரமாக ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும். தேவைப்பட்டால் கூட்டுக்குழுவின் அவகாசம் நீட்டிக்கப்படலாம்.

The post மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்: உடனடியாக கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Joint Committee ,New Delhi ,Joint Committee of Parliament ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி நியமனம்