×

ஏய் குருவி… சிட்டுக்குருவி!

நன்றி குங்குமம் தோழி

“சிட்டுக்குருவிகள் அழிந்து வரும் நிலைக்கு முக்கிய காரணமே அவற்றிற்கான சரியான இருப்பிடம் இல்லாமல் போனதுதான். மரங்களை அழித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் அவை கூடுகள் கட்டுவதற்கும் இருப்பிடம் இல்லாமல் தவிக்கின்றன. சிட்டுக்குருவிகள் என்கிற பறவை இனம் அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால், அவற்றின் இருப்பிடத்தை நாம் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்” என பேசத் தொடங்குகிறார் கூடுகள் தொண்டு அமைப்பின் நிறுவனர் ஷாந்தினி கணேசன்.

சிட்டுக்குருவிகளை அழிய விடாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஷாந்தினி, மரப்பெட்டிகளால் ஆன கூடுகளை வடிவமைத்து கொடுக்கிறார். சிட்டுக்குருவிகள் மீதான ஆர்வத்தினையும் கூடுகள் தொண்டு அமைப்பினை தொடங்கியதை குறித்தும் மேலும் விளக்குகிறார். “சிறுவயதிலிருந்தே எனக்கு இயற்கையின் மீது ஆர்வமும் அக்கறையும் அதிகம். நான் கல்லூரி படிப்பை முடித்திருந்த வேளையில்தான் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவது குறித்த விழிப்புணர்வு எனக்குள் ஏற்பட்டது. அதற்கான காரணத்தை ஆராய்ந்த போதுதான், அவை இருப்பிடம் இல்லாமல் தவிப்பது தெரியவந்தது. அவைகளுக்கு சிறு இடம் கிடைத்தாலே போதும். அதற்குள் மிக கச்சிதமாக கூட்டினை அமைத்துக் கொள்ளும்.

மரக்கிளைகளின் இடைவெளிகளில் மட்டுமில்லாமல், கிடைக்கும் இடங்களில் கூட்டினை அமைத்துக் கொள்ளும். அதனால் நாம் வசிக்கும் இடங்களிலேயே அவற்றிற்கும் இருப்பிடம் அமைத்து கொடுத்தால் என்ன என்று தோன்றியது. மேலும் அவற்றின் பாதுகாப்பிற்கும் அது தான் சரியான தீர்வு. உடனே எங்க வீட்டை சுற்றி சிட்டுக்குருவிகள் தங்குவதற்காக மரப்பெட்டிகளால் ஆன கூடு போன்ற ஒரு இருப்பிடத்தை அமைத்தேன். அடுத்த சில நாட்களில் அதில் சிட்டுக்குருவிகள் தங்க துவங்கின. மரப்பெட்டிக்குள் தன் கூட்டினையும் அமைத்துக்கொண்டது. வீட்டில் எப்போதும் அதன் கீச் கீச் சத்தம் சங்கீதம் போல் இருந்தது.

அவற்றின் செயல்களை கவனிக்கும் போது மன அமைதியினை உணர்ந்தேன். அப்போதுதான் என் வீட்டில் மட்டும் இல்லாமல் மேலும் பல இடங்களில் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைக்க நினைத்தேன். சுற்று வட்டார வீடுகளில் மரப்பெட்டி கூடுகளை அமைத்துக் கொடுத்தேன். அவர்கள் வீட்டிலும் குருவிகள் தங்க ஆரம்பித்தன. இது மேலும் என்னை ஊக்கப்படுத்தியது’’ என்றவர் திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் இணைந்து சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

‘‘என் கணவரும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர். எங்க இருவரின் சிந்தனையும் ஒத்துப்போனதால் இருவரும் சேர்ந்தே கூடுகளை தயாரித்து வீடுகளுக்கு வழங்கும் செயலில் ஈடுபட ஆரம்பித்தோம். வீடுகள் மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளிலும் கூடுகளை அமைக்க திட்டமிட்டோம். அதற்காக எங்க வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளியில் பேசி அங்கு 15 கூடுகளை பொருத்தினோம். அந்த ஏரியாவில் அவ்வப்போது சிட்டுக்குருவிகள் வந்து போகும் என்பதால் பள்ளியில் பொருத்திய கூடுகளில் அவை தங்க துவங்கியது மட்டுமில்லாமல் அதில் கூடுகட்டி குஞ்சும் ெபாரித்து அதன் இனம் வளரத் துவங்கியது. இப்போது அந்தப் பள்ளிக்கு சென்றாலும் அங்கு சிட்டுக்குருவிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு உயிரினத்தை பாதுகாக்கிறோம் என்ற சந்தோஷம் எங்களுக்கு இருந்தாலும், அதை செயல்படுத்த போதுமான நிதி தேவைப்பட்டது.

அதனால் நானும் என் கணவரும் இணைந்துதான் இந்த தொண்டு அமைப்பினை துவங்கினோம். எங்களை போன்ற ஆர்வமுள்ள பலர் இந்த அமைப்பில் இணைந்து எங்களுக்கு உதவ முன்வந்தார்கள். ஆனால் கூடுகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அதற்கான செய்கூலி அதிகமானது. அந்த செலவினை கட்டுப்படுத்த நாங்களே கூடுகளை தயாரிக்க துவங்கினோம். அது எங்களுக்கு மன நிறைவை கொடுத்தது. அந்த அனுபவத்தை கூடுகளை வீட்டில் பொருத்துபவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். அதனால் பள்ளிகளில் மாணவர்களிடம் மூலப்பொருட்களை கொடுத்து கூட்டினை தயாரிக்க சொன்னோம்.

பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்கள் எளிதாக வடிவமைக்கும் வகையில் வெட்டப்பட்ட மரத்துண்டு, ஆணிகளை அவர்களிடம் கொடுத்து, கூட்டினை தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கிறோம். அவர்கள் கையால் தயாரித்த கூட்டில் குருவிகள் வந்து தங்குவதைப் பார்க்கும் போது, அவர்களுக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது. இது போன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடுகளை அமைக்கும் பட்டறைகளை அமைத்து, வீடுகளில் கூட்டினை எங்களின் அமைப்பு மூலம் பொருத்தி வருகிறோம். தற்போது சென்னையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் செயல்படுத்தி, தமிழகம் முழுதும் பத்தாயிரம் கூடுகளை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம். அடுத்த ஒரு வருட காலத்திற்குள் ஒரு லட்சம் கூடுகளை அமைக்க வேண்டும் என்று இலக்கினை நிர்ணயித்து இருக்கிறோம்” என்றவர் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் நம்முடன் பகிர்கிறார்.

“சிட்டுக்குருவிகள் நமது சுற்றுச்சூழலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சிகளும் புழுக்களும்தான் இவற்றின் உணவு என்பதால், தாவரங்களிலும் பூக்களிலும் அமர்ந்து அவற்றை சேதப்
படுத்தக்கூடிய பூச்சிகளையும் சிட்டுக்குருவிகள் உணவாக உண்கின்றன. உணவு சங்கிலியின் இணைப்பான உணவு வலை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை போன்றவற்றிலும் சிட்டுக்
குருவிகளின் பங்கு அளப்பரியது. உலகில் சிட்டுக்குருவிகளின் மொத்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் அவற்றினை முற்றிலுமாக அழிய விடாமல் தடுத்து அவை பல்கி பெருக வழி செய்வது நமது கடமை. சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் இணைந்து வாழக்கூடியது.

அதனால் குழந்தைகளிடம் அவர்கள் வளரும் காலத்தில் இருந்தே சிட்டுக்குருவிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அதனை பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வும் வளரும். மனிதர்களாகிய நமக்கு மட்டும் இந்த பூமி என்றில்லாமல், இது போன்ற உயிரினங்களுக்கும் சமம் என்கிற எண்ணமும் வரும். மேலும் வீடுகளில் கூடுகளை அமைப்பதால், குழந்தைகளும் அதனை கவனிக்கும்போது மொபைல் பார்க்கும் நேரம் குறைய ஆரம்பிக்கும். மன அமைதியையும் கொடுக்கும். மாணவர்கள் கூடுகளை அமைப்பதால், கவனக்கூர்மை அதிகரிக்க செய்யும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் குருவிகள் நல்ல ஒரு பொழுதுபோக்கா இருக்கும். தற்போது பள்ளி, கல்லூரிகள் மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விழிப்புணர்வாக ஏற்படுத்தி, கூடுகளை வடிவமைத்தலுக்கான பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறோம்’’ என்ற ஷாந்தினி கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

“என்னுடைய ஆசிரியர் பணியில் பிளாஸ்டிக் பேனாக் கழிவுகளை அதிகம் பார்ப்பதுண்டு. நாம் பயன்படுத்தும் பேனாக்கள் பிளாஸ்டிக் கழிவுகளாக மாறுகின்றன. அதனை மாற்ற, பயன்
படுத்தப்பட்ட பேனாக்களை சேகரித்து அதனைக் கொண்டு பேனா வைக்க பயன்படுத்தும் ஸ்டாண்டுகளை தயாரித்து பள்ளிகளில் வினியோகம் செய்தோம். ஸ்ட்ரிங் ஆர்ட் என்கிற ஒரு கலையையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம். பரிசுப்பொருட்களாக கொடுக்கப்படும் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பொருட்கள்தான்.

ஆனால் ஸ்ட்ரிங் ஆர்ட் மூலம் செய்யக்கூடிய கலைப்பொருட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்காது. மரத்துண்டு, வண்ண நூல்கள், ஆணி போன்றவைதான் இதில் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படும். திருமணம் போன்ற விழாக்களில் ரிட்டன் கிஃப்ட்ஸ் கொடுக்கும்போது பிளாஸ்டிக்கினை தவிர்த்து இது போன்று ஸ்ட்ரிங் ஆர்ட் கலைப்பொருட்களை கொடுக்கலாம்” என்றார் ஷாந்தினி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

The post ஏய் குருவி… சிட்டுக்குருவி! appeared first on Dinakaran.

Tags : Kungumam ,
× RELATED குழந்தைக்காக ஆரம்பித்தது… முழு நேர தொழிலாகவே மாறியது!