×

மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும்: அதிபரிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!

டெல்லி : மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும் என்று இலங்கை அதிபருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக,” இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு சிறப்பான இடமுண்டு. Bottom Trawling முறையை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றது; இரு நாடுகளுக்கும் சமூக தீர்வு ஏற்படும் வகையில் மீனவர் பிரச்னையில் தீர்வு காண வேண்டும். இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனையில் சுமூக தீர்வு எட்டப்படுவதையே இலங்கை விரும்புகிறது. மீன்பிடித் தொழிலை பாதிக்கும் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு விரோதமான செயல்பாடுகள் இலங்கையில் நடைபெற ஒருபோதும் இலங்கை அரசு அனுமதிக்காது,”இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ”இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இந்திய பயணத்தால் இரு நாட்டு உறவு வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி மின்சாரத் துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படும். நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும். இயற்கை பேரிடரின்போது நிவாரணம், மீட்புப் பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். இலங்கையின் பால்வளம், மீன்வளத் துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதியுதவி அளிக்கும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பாக இலங்கை அதிபருடன் விவாதிக்கப்பட்டது. மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானம் முறையில் அணுக ஒப்புக்கொள்ளப்பட்டது. மீனவர்கள் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகிறோம். புதிய இலங்கை அரசு இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முயற்சியில் இந்தியா எப்போது நம்பகமான அண்டை நாடாக இருக்கும் என்று திசநாயகவிடம் நான் உறுதியளித்துள்ளேன்” என்றார்.

The post மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும்: அதிபரிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,PM Modi ,Delhi ,Modi ,President ,Anura Kumara Dissanayake ,India ,Hyderabad… ,
× RELATED ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்!