×

அல்சைமரிலிருந்து காப்போம்

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயுர்வேதத் தீர்வு!

மறதி நோய்தான் ஆங்கிலத்தில் அல்சைமர் என்று சொல்லப்படுகிறது. மறதி ஒரு நோயா என்று கேட்டால்… அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு தானே.. அதுபோல அளவுக்கு மீறிய மறதியும் ஒரு நோய்தான். மறதி என்பது எல்லா வயதுடையவர்களுக்கும் ஒரு தோழன் என்றே சொல்லலாம். அதிகப்படியான மறதியை அல்சைமர் நோய் என்று சொன்னாலும், இங்கே எதை அதிகப்படியான மறதி என்று குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் மறதி என்பது எல்லோரிடமும் ஒரே அளவில் இருப்பதில்லை. இளம் வயதினரிடையே பார்த்தாலே சிலருக்கு நீண்ட காலம் ஞாபகம் வைத்துக் கொள்ளும் சக்தி இருக்கிறது. சிலருக்கு கொஞ்ச காலம் கூடவும், சிலருக்கு உடனேயும் மறந்து போகிறது. இப்படி இளம்வயதினரிடையே இத்தனை வேறுபாடு உண்டு.

இப்படிப்பட்ட நிலையில் அல்சைமர் நோயாளிகளை கண்டறிவது எப்படி.. மறதிக்கும் அல்சைமர் நோய்க்கும் என்ன வேறுபாடு? அல்சைமர் நோயாளர்களை எப்படி கண்டு கொள்வது? முதலில் அது எந்த வயதுக்குட்பட்டவரை பாதிக்கும்? இப்படி பல கேள்விகள் நம்முன் வைக்கப்படுகின்றன. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.இந்த நோய் 60 வயது மற்றும் அதற்கு மேலானவர்களையே அதிகம் பாதிக்கிறது. வயதாகும்போது தீவிரமாகிறது. ஆரம்ப நிலையில் மறதிக்கும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே, வித்தியாசம் கண்டறிவது மிகவும் கடினமே. இருந்தாலும், கீழ்க்கண்ட குறிப்புகளின் மூலம் ஓரளவுக்கு வித்தியாசம் கண்டுகொள்ள முடியும்.அவர்களால் சமீப கால நிகழ்வுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது.

அன்றாடம் செய்யக்கூடிய, அடிப்படைப் பணிகளை செய்வதில் கூட சிரமப்படுவார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், குளிப்பது, ஆடை அணிவது போன்ற அடிப்படை விஷயங்களைக்கூட எப்படி செய்வது என்பதையே மறந்து விடுவார்கள். அவர்களால், எதிலும் கவனம் செலுத்த முடியாது. சிந்தித்து செயல்படு என்ற வாக்கியத்திற்கு எதிர்மறையாகவே அவர்கள் இருப்பார்கள். அவர்களால் எந்த ஒரு விஷயத்தையும் சிந்தனை செய்து, செயல்பட முடியாது.

புதியதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு தோன்றாது. ஏனென்றால், அவர்கள் அனைத்து விஷயங்களையும் மறந்துவிடுவார்கள். நாம் மறக்கின்றோம் என்கிற விஷயம் கூட அவர்களுக்கு தெரியாது. அப்படி ஒரு நிலையில், எப்படி அவர்கள் புதிய விஷயத்தில் நாட்டம் காட்டுவார்கள். அவர்களால், எது நல்லது, எது கெட்டது என்று பிரித்துப் பார்க்க முடியாது, மனம் அதிகமாக சஞ்சலத்தில் இருக்கும். அவர்கள் மனது எப்படி சஞ்சலத்தில் இருக்கின்றனவோ, அதுபோலவே அவர்களும் ஒரு இடத்தில் உட்காராமல் அலைந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த நோய் தீவிரம் அடைந்தால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதற்குப்பின், அவர்களுக்கு நேரம் மற்றும் இடம் பற்றிய குழப்பம் இருக்கும். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம். இது என்ன நேரம், நமக்கு முன்னே என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாது. அவர்கள் எப்போதும் ஒரு குழம்பிய நிலையில் இருப்பார்கள்.அவர்கள் தனது குடும்பத்தினரையும், சுற்றத்தார்களையும், நண்பர்களையும் அடையாளம் காண்பதில் கூட, சிரமப்படுவார்கள். மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவர்களுக்கு மெல்லவோ, முழுங்கவோ, பேசவோ, எழுதவோ கூட தெரியாமல் போய்விடும். இதனாலேயே அவர்கள் மற்றவர்களிடையே தொடர்பு கொள்வதை விட்டுவிடுவார்கள். மன அமைதியை இழந்து விடுவார்கள். தூக்கமின்மைக்கு தள்ளப்படுவார்கள். மேற்கூறிய அறிகுறிகள் சிலவற்றை நம் வீட்டு முதியவர்களிடம் கண்டால் அவர்களை முறையான மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது அவசியம்.

இதற்கான காரணம் என்ன?

மரபணுக்கள்,

வாழ்க்கை முறை

பல சுற்றுச்சூழல் காரணங்கள் போன்ற அனைத்து ஒருங்கிணைந்த விளைவுகளால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.காரணங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால், இதில் தெளிவாக உள்ள கோளாறு என்னவென்றால் இது மூளை செல்களை சேதப்படுத்தி அவற்றை அழிக்கிறது. இந்தநோய், மேலும் மேலும் மூளை செல்சேதத்துடன் தொடர்கிறது.

அல்சைமர் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவத்தில் அல்சைமர் நோயை ஸ்மிருதி ப்ரம்ஸ என்று விளக்கப்படுகிறது. ஸ்மிருதி என்றால் நினைவாற்றல், ப்ரம்ஸ் என்றால் இழப்பு, ஞாபகசக்தியை இழப்பது என்று அர்த்தம்.

ஹீன சத்வம் (பலகீனமான மனோநிலை) இதற்கு பிரதானமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால், அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக ஆயுர்வேதம் கூறுவது, நினைவாற்றல் மற்றும் மூளை சக்தியை மேம்படுத்துவதாகவும், நரம்பு மண்டலத்தைப் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் உள்ள மூலிகைகளை பயன்படுத்துவதேயாகும். ஆயுர்வேதத்தில் வாத சமண சிகிச்சைகளும் மற்றும் மேத்யஒளஷத உள் மருந்துகளும் கொடுப்பது நல்ல பலனை அளிக்கும்.

உள்மருந்துகள்

கஷாய வகையில் பலாமூலக்கஷாயம், திராக்ஷாதி கஷாயம், கல்யாணக்க பால் கஷாயம் கொடுக்கலாம்.சூரண வகையில் அஸ்வகந்தா சூரணம், சாரஸ்வதாதி சூரணம், சடாமாஞ்சில் சூரணம் கொடுக்கலாம். இந்த சூரணங்கள் வாத தோஷத்தை சமநிலைப்படுத்தும், முக்கியமாக இந்த சாரஸ்வதாதி சூரணம் நினைவாற்றலை அதிகரிக்கும். மாத்திரை வகையில் பூரண சந்திரோதயம், இது மூளை மற்றும் நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும். மற்றும், ஸ்மிருதி ஸாகர ரஸ் கொடுக்கலாம். இது நினைவாற்றலைக் கூட்டும் இந்த மருந்துகளை ஆயுர்வேத மருத்துவர்களிடம் அணுகி, அவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்வதே முறையாகும்.

நெய் வகையில் கல்யாணக்க கிருதம், மகா கல்யாணக கிருதம் கொடுக்கலாம். இது நினைவாற்றலைக் கூட்டும். இந்த மருந்துகளை ஆயுர்வேத மருத்துவர்களிடம் அணுகி, அவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்வதே முறையாகும். இது மூளைக்கும், நரம்பிற்கும் புத்துணர்ச்சி தரும். மேலும், சாரஸ்வத கிருதம் மற்றும் ப்ரம்மி கிருதம் பயன்படுத்தலாம். இது நினைவாற்றலைத் தூண்டும்.

லேகிய வகையில் கூஷ்மாண்ட அவலேகியம் உட்கொள்ளலாம். இது உடலுக்கு எதிர்ப்புச் சக்தியையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும். மேலும், வாத தோஷத்தை சமநிலைப்படுத்தும்.

தைல வகையில் ஷீரபலாத்தைலம் கொடுக்கலாம். இது தூக்கமின்மையைப் போக்கும். மேலும், நரம்பிற்குப்
புத்துணர்ச்சி தரும்.

வெளி சிகிச்சைகள்

க்ஷிரோ பிச்சு, க்ஷிரோ வஸ்தி, நஸ்யம் போன்ற ஆயுர்வேத பஞ்சகர்ம முறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு பலா லாக்ஷாதி தைலம் பயன்படும். இது, மனதையும், புலன் உறுப்புகளையும் புத்துணர்ச்சியூட்டுகிறது.

மூளைக்கு ஊட்டமளிக்கிறது. எனவே, அறிவுத்திறனை ஊக்குவிக்கிறது.

மன அமைதிக்கு உதவுகிறது.

வாத தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது.மருந்து என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே நமக்கு உதவி செய்யும். இந்த நோயில் உள்ளவர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மனம் அமைதியின்மையாக இருக்கும். மிகவும், குழப்ப நிலையில் இருப்பார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு தேவைப்படுவது, குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் மட்டும்தான். அதனால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருத்தல், முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து, அவர்களை புரிந்து கொண்டு அவர்களின் நிலைக்குத் தகுந்தாற் போல் உதவி செய்து அக்கறையாகவும். பொறுமையுடனும் பார்த்துக் கொள்ள வேண்டும். முழு நேரமும், அவர்களிடம் செலவழித்து அவர்களை கண்காணித்தல் மிகவும் முக்கியம்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு பராமரிப்பது..

பராமரிப்பாளர்கள் செய்ய வேண்டியவை

ஒரே வழக்கமான பழக்கவழக்கங்களை பின்பற்றவும்.

பராமரிப்பாளர்கள் பின்வரும் தினசரி வேலைகளில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

சமையல் மற்றும் அதை பேக்கிங் செய்வது

நடைப்பயிற்சி மேற்கொள்வது

நடனம்

இசை கேட்பது

ஒரு எளிய பலகை விளையாட்டு, கேரம், செஸ் போன்று விளையாடுவது.

துணியை மடிப்பது, சலவை செய்வது மற்றும் தோட்டக்கலை போன்ற எளிய வீட்டு வேலைகளை செய்வது.

பிடித்த உணவகம், அருங்காட்சியகம் அல்லது பூங்காவிற்கு செல்வது.

பிடித்த திரைப்படத்தை பார்ப்பது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களை உற்சாகப்படுத்துவது.

மேற்கூறியவற்றில் அல்சைமர் நோயாளர்களை உட்படுத்துவதால் அல்சைமர் நோயுடன் ஆரோக்கியமான மற்றும் மன அமைதியான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றாக சாப்பிடவும். நீரூட்டத்துடன் இருக்கவும் உதவுவது இன்றியமையாதது.

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உணவை வழங்குதல்.

வண்ணமயமான தட்டுகளில் உணவு பரிமாறுதல்

காலை உணவே உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை கொடுப்பதால், காலை உணவின் பகுதி அதிகமாக இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்து மிகுந்த உணவாக அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

ரேடியோ அல்லது தொலைக்காட்சியை அணைப்பதன் மூலம் சாப்பாட்டு நேரத்தை அமைதியாக்குங்கள்.

மெல்லவும், விழுங்கவும் எளிதான உணவுகளை தேர்ந்தெடுக்கவும்.

பராமரிப்பாளர்களுக்கு சுய பாதுகாப்பு

அல்சைமர் நோயால், பாதிக்கப்பட்ட ஒருவரை பராமரிப்பது ஒரு நபரின் வாழ்க்கையைப் பல வழிகளில் பாதிக்கலாம். இது அவர்களின் உடல் மற்றும் மன நலனை கணிசமாக பாதிக்கும்.

பராமரிப்பாளர்கள் தங்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும். இரக்கத்தை வளர்த்துக் கொள்ளவும். சோர்வைத் தடுக்கவும் கீழ்க்கண்ட சுய பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை முயற்சி செய்யலாம்.
அன்றாடம் எதிர்கொள்ளும் விஷயங்களை நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்.

ஒவ்வொரு இரவும் போதுமான தூக்கம் வேண்டும்.தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த அல்சைமர் நோயைத்தடுக்க எந்த குறிப்பிட்ட வழியும் இல்லை. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

தொகுப்பு: உஷாநாராயணன்

The post அல்சைமரிலிருந்து காப்போம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED எந்த உணவுக்கு எது நிவாரணம்?