×

தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து மறைமுக செயல் திட்டத்துடன் ஆதவ் அர்ஜூனா இயங்குகிறார்: திருமாவளவன் ேபட்டி

திருச்சி: தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து மறைமுக செயல் திட்டத்துடன் ஆதவ் அர்ஜூனா இயங்குகிறார் என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறார்கள். அரசமைப்பு சட்டத்தை போற்றிக் கொண்டே, புகழ்ந்து கொண்டே அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜ அரசு நடத்தி வருகிறது. ஏற்கனவே 370வது சட்டப்பிரிவை நீக்கினார்கள். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அணி திரள வேண்டும்.

இன்று பாஜ அரசு தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி அதன் அதிகாரத்தையே பறிக்கிறார்கள். பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்படும் சுமை. பொருளாதார விரயத்தையும், நேரத்தையும் கட்டுப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம் என்கிறார்கள். அது அப்பட்டமான பொய்.
அதிபர் ஆட்சி முறையை, ஒரே கட்சி ஆட்சியை கொண்டு வர வேண்டும், மாநில கட்சிகளே இருக்க கூடாது என்கிற உள்நோக்கத்தில் தான் இதை கொண்டு வருகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் கூட்டணி கட்சிகளின் தயவே இல்லாமல் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி ஒரு நிலையை தான் கொண்டுவர பார்க்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்களைப் பற்றி கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது, அது நான் சுதந்திரமாக எடுத்த முடிவுதான். விஜய்யின் மாநாடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே புத்தக பதிப்பகத்தாரிடம் இந்த தகவல்களைத் தெரிவித்துவிட்டேன். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது. ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. அப்படி சொல்ல கூடாது. அவர் மீண்டும் வி.சி.க.,வில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘என்னை விமர்சிப்போரின் உண்மையான குறி திமுகதான்’
கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் நேற்று நடைபெற்ற தொழிலதிபர் இல்ல மணவிழாவில் திருமாவளவன் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே கூட்டணியில் இருந்து வருகிறோம். நாங்கள் புதிதாக ஒரு கூட்டணி அமைப்பதற்கு தேவையில்லை. என்னுடைய நம்பக தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் திரும்பத் திரும்ப இந்த செய்தியை சொல்கிறேன். திமுக உடனான விசிக கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக சில சக்திகள் என்னை குறி வைக்கின்றனர். என்னை விமர்சிப்போரின் உண்மையான குறி திமுகதான்; திருமாவளவன் இல்லை. திமுகவை அழிக்க எண்ணும் சக்திகள் என்னை ஒரு தூதாக பயன்படுத்தி அதை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். விசிகவை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி இல்லை; அதில் சூது, சூழ்ச்சி, சதி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக ஆட்சிக்கும் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.

The post தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து மறைமுக செயல் திட்டத்துடன் ஆதவ் அர்ஜூனா இயங்குகிறார்: திருமாவளவன் ேபட்டி appeared first on Dinakaran.

Tags : Adav Arjuna ,Thirumavalavan Epatty ,Trichy ,Thirumavalavan ,Trichy Airport ,Vice President ,Union Government ,
× RELATED விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு